ஈரோடு பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! மாலை சேலம் விசிட்!
சென்னை: இன்று ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், பெருந்துறையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இன்று மாலை சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 11 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தி பொதுமக்கள், தொண்டர்களை சந்திக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 11) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு 11 மணிக்கு கோவை விமான நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து சாலை வழியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்த ஸ்டாலின்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், ரூ.15.7 கோடியில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
அதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், வேளாண் வளர்ச்சியில் மாநிலத்தில் ஈரோடு மாவட்டம் 8வது இடத்தில் உள்ளது. ஈரோடு வேளாண்மையில் வளர்ச்சி பெற்ற பல முன்னோடி விவசாயிகளை கொண்ட மாவட்டமாக விளங்குகிறது. டெல்டா பாசனத்துக்காக நாளை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைக்க உள்ளேன் என பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
போலி விவசாயி நான் அல்ல
விவசாயிகளால்தான் உணவு கிடைத்து, உடல் நலத்தோடு மக்கள் வாழ்கின்றனர்; விவசாயிகளால்தான் இந்த மண்ணும், மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்றதும், வேளாண்மை உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றினோம்; வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யத் தொடங்கினோம்." என்றார்.
மேலும், தோளில் பச்சை துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது. விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை எனில் முதல் ஆளாக துணை நிற்பவன் நான்தான்" எனப் பேசியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சேலம் விசிட்
அதைத் தொடர்ந்து அங்கிருந்து இன்று மாலை சேலம் செல்லும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கு நடுவே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 11 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோ நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று இரவு மேட்டூர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (ஜூன் 12) காலை 9 மணிக்கு மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.












Click it and Unblock the Notifications