நான் முழுநேர அரசியல்வாதி இல்லையா? தூங்கும் யாரும் முழுநேர அரசியல்வாதி இல்லை! போட்டுத் தாக்கிய கமல்!
சென்னை : என்னை முழுநேர அரசியல்வாதி இல்லை என்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் எல்லாம் சீட்டாடுவதை நான் பார்த்திருக்கிறேன் என மநீம பொதுக் குழுவில் பேசிய நடிகரும் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், 8 மணி நேரம் தூங்கும் எவனும் முழு அரசியல்வாதி கிடையாது எனவும், முழு நேர அரசியல்வாதியாகி குடும்பத்தை தெருவில் விட்டுவிட்டு, என் பின்னால் வாருங்கள் என்று நான் சொல்லவில்லை என கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்படுவது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் இப்பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய கமல்," சின்ன சின்ன பதவிக்கு ஆசைப்படாதீர்கள். இதுதான் எனக்கு நான் கொடுத்துக் கொண்ட அறிவுரை அதை அப்படியே உங்களுக்கு வழங்குகிறேன். அவர் விமர்சனத்தின் மூலம் எனக்கு பாடம் கற்பித்தவர் அவர் வாழ்க்கையில் மூலம் எனக்கு பாடம் கற்பித்தவர் மகாத்மா காந்தி. மக்களை பார்த்து பேசக்கூடிய எந்த ஒரு ஊடகமாக இருந்தாலும் மேடையாக இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு.
இதை நான் நான்கு வயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் என் வாழ்வு முறை. இதுதான் வாழ்க்கை எனக்கு சொல்லும் செய்தி. அதனால்தான் நான் அரசியலை தேர்ந்தெடுத்தேன். நீங்கள் அயர்ந்து இருக்கும் நேரத்திலும் நேர்மைக்கு சோதனை வரும். எனக்கும் வந்து இருக்கிறது. நீங்கள் எல்லாம் எதுக்கு அரசியல் போறீங்க என்று என்னை கேட்டார்கள். அதெற்கெல்லாம் தனியாக சாதுரியம் வேண்டும் என்றார்கள். நான் என்ன வேட்டையாடுதற்காகவா போக போகிறேன்.

நான் தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கிறேன். அது நிரந்தரம் இல்லை. பிரதமர் பதவியும் அதுதான் நாங்கள் விரும்பும் ஜனநாயகம். நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்றால் ஒருவருடைய நாமம் மட்டும் பாடப்படும். அனைத்து சாலைகளிலும் உள்ள டிராபிக் சிக்னல் ஒரே நேரத்தில் போட்டால் என்ன ஆகும். கோவிட் விட கொடூரமான நோயில் (ஒரே நாடு ஒரே தேர்தல்) இருந்து தப்பித்து விட்டோம். ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை யோசிக்க நேரம் கொடுக்க வேண்டும்.
அந்த அரியாசனத்தில் (ஆட்சியில்) யாரை உட்கார வைக்க வேண்டும் என்று மக்கள் தீர்மானிப்பார்கள். மகாத்மா காந்தி, அம்பேத்கர் கொண்டு வந்த சட்டங்களை மாற்ற முயற்சி செய்கிறார்கள். ஜனநாயகத்தை நாம் காக்க வேண்டும். கோயம்புத்தூரில் நடந்தது தோல்வி என்றால், பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது வெற்றி அல்ல. நான் எவ்வளவு பெரிய ஆள் என்பதை காட்ட வேண்டிய இடத்தில் காட்டுவேன்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்தார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னார். நல்லா பிள்ளைகளை வளர்த்ததாக கூறினார். நம்மை பற்றி இன்னும் 10 வருடம் கழித்து தெரியும். 2026 யை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். வேலை செய்து தான் ஆக வேண்டும். அன்பு கட்டளையாக ஏற்று கொள்ளுங்கள். கமல்ஹாசன் முழு நேர அரசியல்வாதி இல்லை என்பது பொருந்தாது. வேலை செய்யும் நேரத்தில் செய்தால் போதுமானது. யாரும் இங்கு முழு நேர அரசியல்வாதி அல்ல.
என்ன மறுபடியும் சினிமாவுக்கு சென்று விட்டார் என்று கேட்கிறார்கள். நான் கோட்டைக்குச் சென்று கஜானாவை திறந்து பணம் எடுப்பேனா.? வேலைக்குப் போய்தான் ஆக வேண்டும். என்னை முழுநேர அரசியல்வாதி இல்லை என்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் எல்லாம் சீட்டாடுவதை நான் பார்த்திருக்கிறேன். 8 மணி நேரம் தூங்கும் எவனும் முழு அரசியல்வாதி கிடையாது. இருக்கும் நேரத்தில் ஒழுங்காக வேலை செய்தால் போதுமானது.
முழு நேர அரசியல்வாதியாகி குடும்பத்தை தெருவில் விட்டுவிட்டு, என் பின்னால் வாருங்கள் என்று நான் சொல்லவில்லை. நாட்டின் பிரதமராக தமிழன் வரவேண்டும். அதற்கு நாம் தயாராக வேண்டும். நான் அரசியலுக்கு வந்தது, எனக்காக இல்லை, நாளைக்காக தான். ஒருவரை ஒருவர் இடறி விடும் வேலை செய்தால் நான் உங்கள் தோளிலிருந்து கையை எடுத்து விடுவேன்" என்றார்.












Click it and Unblock the Notifications