"ஒன்று கூடுவோம்; வென்று காட்டுவோம்" நன்றி கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதற்காக கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறி இருந்த நிலையில், ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் என்று கமல்ஹாசன் ட்விட்டரில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் வேட்பாளரை நிறுத்த மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை நேரடியாக சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு கோரினார்.

மநீம ஆலோசனை
அந்த வகையில் சில வாரங்களுக்கு முன் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இதனடிப்படையில் நேற்றுமுன் தினம் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு கோரினார். அதற்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து கூறுவதாக கமல்ஹாசன் கூறி இருந்தார்.

கமல்ஹாசன் அறிவிப்பு
இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கமல்ஹாசன் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் நன்றி
இதன் மூலம் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளரான, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்துள்ள திரு.கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி என்று பதிவிட்டிருந்தார்.

கமல்ஹாசன் ட்வீட்
இதற்கு பதில் அளித்துள்ள கமல்ஹாசன், ஒன்று கூடுவோம்; வென்று காட்டுவோம் தமிழ்நாடு வாழ்க என்று பதில் அளித்து பதிவிட்டுள்ளார். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளதால், இந்தக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த ஐஜேகே விலகி உள்ளது. அதற்கு பதிலாக மக்கள் நீதி மய்யம் கட்சி நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications