"எவ்வளவு மழை வந்தாலும் சரி.. நகராட்சித்துறை தயாராக இருக்கிறோம்" அமைச்சர் கேஎன் நேரு உறுதி!
சென்னை: தமிழ்நாட்டில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் எதிர்கொள்ள நகராட்சி துறை தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கேஎன் நேரு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கேஎன் நேரு கூறுகையில், கடந்த ஆண்டு மழை குறைவாக இருந்தாலும் கூட, சென்னை மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். அதனால் சென்னையில் மழையால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் அதற்கான நிதியையும் உடனடியாக ஒதுக்கீடு செய்து கொடுத்தார்.

சென்னை மீண்டுள்ளது
அந்த மழைநீர் வடிகால் பணிகள் சில பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கிறது, சில இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது, சில பகுதிகள் நடைபெற இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக மழை பெய்திருந்தாலும், இரண்டே நாட்களில் சென்னை மாநகரம் மீண்டுள்ளது.

அனைவருக்கும் நன்றி
அதற்காக எங்கள் துறை சார்பாக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் உள்ளூர் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதற்காகவும் அவர்களுக்கு நன்றியை கூறி கொள்கிறேன். அதேபோல் மீண்டும் வரும் 9ம் தேதி மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்குள் கால்வாய்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்ற வேண்டும்.

நகராட்சித்துறை தயார்
அதேபோல் பள்ளமாக உள்ள சாலைகளை சரிசெய்ய வேண்டும். அதற்கான உத்தரவை ஏற்கனவே ஆணையர்கள் வழங்கிவிட்டார்கள். அதேபோல் தண்ணீர் எங்கெல்லாம் சரியாக வெளியேறவில்லை என்பதையும் கண்டறிந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதனால் வருகிற மழை, எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள நகராட்சித்துறை தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

சாலைகள்
தொடர்ந்து ஓட்டேரி ஏரி மற்றும் கேப்டன் கால்வாய் ஆகியவற்றை தூர்வாரும் பணிகள் மழைக்காலம் முடிவடைந்த பின்னர் நடப்பாண்டில் செய்து முடிக்கப்படும். அதேபோல் சென்னையில் மட்டுமே 27 ஆயிரம் சாலைகள் அமைப்பதற்காக உத்தரவிடப்பட்டு, நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மழை முடிவுக்கு வந்தபின், சாலைகள் கட்டாயம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications