12 சம்பவங்கள்.. ‘இந்த ஆங்கிள்ல பாருங்க’.. ஆர்.எஸ்.எஸ், பாஜகவை விசாரிக்கணும் - ‘முரசொலி’ வீசிய வெடி!
சென்னை : தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவினரை விசாரிக்க வேண்டும் என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி நிர்வாகிகள் தங்கள் வாகனங்களுக்கு தாங்களே தீவைத்துக்கொண்ட 12 சம்பவங்களை பட்டியலிட்டுள்ளது முரசொலி.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக, காவல்துறை இந்தக் கோணத்திலும் அணுகிப் பார்க்கலாமே என வலியுறுத்தியுள்ளது முரசொலி.
முன்னதாக, தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், விளம்பரத்திற்காக தனக்குத் தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் பாம் அட்டாக்
கடந்த சில நாட்களாக கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, சேலம் என பல இடங்களில் பா.ஜ.க அலுவலகம் மற்றும் பா.ஜ.க-வினர் வீடு, வாகனங்கள், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் தொடர்புடைய இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த குண்டு வீச்சு சம்பவங்களுக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, இந்த சம்பவங்களில் ஈடுபட்டதாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கோணத்திலும் அணுகிப் பார்க்கலாமே
இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வினரை விசாரிக்க வேண்டும் என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது. முரசொலி நாளிதழ் நேற்று வெளியிட்டுள்ள ஒரு சிறப்புக் கட்டுரையில், கடந்த காலத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி நிர்வாகிகள் தங்கள் வாகனங்களுக்கு தாங்களே தீவைத்துக்கொண்ட 12 சம்பவங்களை பட்டியலிட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில், காவல்துறை இந்தக் கோணத்திலும் அணுகிப் பார்க்கலாமே என வலியுறுத்தியுள்ளது முரசொலி.

12 சம்பவங்கள்
வலைதளங்களில் வலம்வரும் செய்திகள் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினர் எந்தவிதச் செயல்களிலும் இறங்கிடத் தயங்காதவர்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இதை எல்லாம் கூடக் காவல்துறை தனது கவனத்தில் கொண்டு, உண்மைக் குற்றவாளிகளை - அமைதிக்கு ஊறு விளைவிக்க எண்ணும் பேர்வழிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தந்திட வேண்டும் எனக் கூறியுள்ளது முரசொலி. செய்தித் தளங்கள், நாளிதழ்களில் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த இதுபோன்ற 12 செய்திகளைப் பட்டியலிட்டுள்ளது முரசொலி.

தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு
செய்தி 1: கோவில் சொத்து தகராறில் பிரச்சினையை திசைதிருப்ப தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு விசிய திருவேற்காடு பகுதி பா.ஜ.க பிரமுகர் பரமானந்தம் கடந்த 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்து 2: காருக்கு தாங்களே தீ வைத்துவிட்டு நாடகமாடிய இந்து மக்கள் கட்சியினர் கைது. இந்தச் சம்பவம் திருவள்ளூரில் 2013ஆம் ஆண்டு. ஜூலையில் நடைபெற்றுள்ளது.

எரித்ததாக நாடகம்
செய்தி 3: சென்னை மதுரவாயலில் தனது காருக்கு தானே தீவைத்துவிட்டு மர்ம நபர்கள் எரித்துவிட்டதாக நாடகமாடிய பா.ஜ.க மாவட்டச் செயலாளர் சதிஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். இது நடந்தது 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 16!
செய்தி 4: சொந்த வாகனத்தை தானே எரித்து தீவிரவாதிகள் சதி என நாடகம். கோபியில் இந்து அதிரடிப் படை நிர்வாகி கைது. இது நடந்தது 2020 ஆம் ஆண்டு , அக்டோபர் 6.

பெட்ரோல் குண்டு
செய்தி 5: விளம்பரத்திற்காகவும் கட்சியில் பதவி உயர்வு கிடைக்கவும் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு, பள்ளிவாசல் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பதால் தன்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக நாடகமாடிய பா.ஜ.க விருதுநகர் நிர்வாகி சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி எஸ்.பி. அலுவலகத்தில் மனு. இந்தச் செய்தி வெளிவந்த தேதி 2021ஆம் ஆண்டு, ஜூலை 1.
செய்தி 6: சுவாமி அக்னிவேஷ் தன்வசம் கவனத்தைத் திருப்ப விளம்பரம் தேடிக்கொள்ள தன்னைத்தானே தாக்கிக் கொண்டு நாடகமாடினார். இதுபற்றிய செய்தி அவுட்லுக் இணையதளத்தில் வந்த தேதி 2013 ஆம் ஆண்டு, ஜூலை 13.

பரபரப்பு செய்தி
செய்து 7: பா.ஜ.க தலைவர் பிரத்யூஸ் மணி திரிபாதி தனக்குத்தானே தாக்கிக் கொண்டு அதன்மூலம் தனது எதிரிகளுக்கு காந்தண்டனை வாங்கித்தார நினைத்து தன்னைத்தானே குத்திக் கொண்டார். ஆனால் பரிதாபமாக அவர் இறந்துபோனார். இந்தப் பரபரப்பு தகவல் வந்தது 2013ஆம் ஆண்டு , மசம்பர் 11-ஆம் தேதி.
செய்தி 8 : பிரபலம் ஆவதற்காக தனது கார்மீது பெட்ரோல் குண்டு வீசவைத்த இந்து அமைப்புத் தலைவர்: போலிஸ் விசாரணையில் அம்பலம்! இந்தச் சம்பவம் தொடர்பான செய்தி ஏடுகளில் வெளிவந்தது ஏப்ரல் 10-ந் தேதி.

தன் காரிலேயே
செய்தி 9 : போலீஸ் பாதுகாப்புக்காக தன் காரிலேயே பெட்ரோல் குண்டு வீசிய இந்து அமைப்பு பிரமுகர் கைது! பொன்னேரியில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து ஜூலை 7-ஆம் தேதி வெளிவந்த செய்தி.
செய்தி 10: அரசியல் பிரபலமாவதற்காக தனது வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய திண்டுக்கல்லைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கைது. கைதானவர் பாஜகவின் 10வது வார்டு கிளைத்தலைவர் பிரவின் குமார் என்பராவார். இந்த கைது விபரம் ஏடுகளில் ஆகஸ்ட் மாதம், 31ஆம் தேதி வெளிவந்துள்ளது.

சுய விளம்பரம்
செய்தி 11: கட்சியில் முக்கிய பதவிபெற கூலிப்படையை ஏவி பெட்ரோல் குண்டு விசிய பாரதிய ஜனதா பிரமுகர் ராமநாதன் கைது. இது நடந்தது அக்டோபர் 3-ஆம் தேதி கோவையில்!
செய்தி 12 : அரசியல் சுயவிளம்பரத்துக்காக தன்னைத்தானே வெட்டிக் கொண்டு நாடகம், இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது. மார்ச் 19, 2020

அண்ணாமலை
இப்படி பல தகவல்கள் அடங்கிய சேதிகள் அதற்கான ஆதாரங்கருடன் வலைதளத்தில் வலம் வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். கும்பல் சத்தகையது என்பதைத் தோலுரிக்கும் செய்திகள் இவை. தமிழக பாஜக தலைவரோ, இராணுவ வீரரின் இறுதி ஊர்வலத்திலேயே அரசியல் நடத்த எண்ணுபவர் என்பதை, சமீபத்தில் மதுரையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக அவர் பேசியதாக வெளிவந்த "தொலைபேசி உரையாடல் தெளிவாகக் காட்டியுள்ளது. சமீபத்தில் நடைபெறும் குண்டு வீச்சு சம்பவங்களில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்திட தீவிரமாக பணியை முடுக்கிவிட்டிருக்கும் காவல்துறை, மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளையும் கருத்தில்கொண்டு ஆராய்ந்திட வேன்டும் என்பதே நம் கோரிக்கை!" என சிலந்தி என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள முரசொலி கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications