உங்கள் எல்லை தெலுங்கானா.. தமிழகத்தில் வீரத்தை காட்டாதீர்.. ஆளுநர் தமிழிசைக்கு முரசொலி அட்வைஸ்!
சென்னை: தெலுங்கானாவில் உங்கள் ஜம்பம் பலிக்கவில்லை என்பதால் தமிழகத்தில் வீரத்தை காட்ட நினைக்காதீர் என ஆளுநர் தமிழிசைக்கு முரசொலி கட்டுரை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது: பலருக்கு மைக்மேனியா இன்னும் சிலருக்கு கேமராமேனியா என்பார்கள்! அதாவது கேமராவில் முகத்தைக் காட்ட வேண்டும். மைக்கில் பேச வேண்டும் எனும் மேனியா- அதாவது ஒரு வித மன வியாதி சிலருக்கு அதிகம் உண்டு! அத்தகைய மனநோய் நமது தெலுங்கானா ஆளுநர், மன்னிக்கவும் அவரை ஆளுநராக தெலுங்கானா அரசோ, மக்களோ மதிப்பதில்லை. அவருக்கும் மதியாதார் வாசல் மிதியேன் என்ற முறையில் அங்கு அதிகம் செல்வதைத் தவிர்த்து இப்போதெல்லாம் புதுவையில் தனது ஆட்சி அதிகாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்!

ரங்கசாமி
பெரியவர் ரங்கசாமியும் முதல்வர் நாற்காலி இருந்தால் போதும் என்ற நிலையில் மனதிருப்தி கொண்டு பெட்டி பாம்பாய் அடங்கி கிடக்கிறார். ஆளுநர் தமிழிசைக்கு புதுவையில் யாரையும் எதிர்த்து அரசியல் நடத்த இயலவில்லை. தெலுங்கானாவில் வாயைத் திறக்க முடியவில்லை. அவர்களை மிரட்ட இவர் முறத்தை எடுத்தால், தெலுங்கானா ஆட்சியாளர்கள் அவர்கள் கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து மிரட்டி ஓட ஓட விரட்டுகிறார்கள்.

தெலுங்கானா அரசு
தெலுங்கானா அரசுக்கு செக் வைக்க தமிழிசையை அனுப்பிய ஒன்றிய பாஜக அரசு அங்கே ஆளுநர் தமிழிசை படும் பாட்டை பார்த்து கைபிசைந்து நிற்கிறது. எனக்கு ஆளுநருக்குரிய மரியாதையை தெலுங்கானா அரசு தரவில்லை. குடியரசுத் தின விழாவில் கொடியேற்ற அழைப்பு இல்லாததால் நான் எனது ராஜ்பவனிலேயே கொடியேற்றி எனக்கு நானே கொண்டாடிக் கொண்டேன், கவர்னர் உரை ஆற்றக் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை- என போகுமிடமெல்லாம் புலம்பித் தீர்த்து கொண்டிருக்கிறார், ஆளுநர் தமிழிசை. அவரை ஆளுநராக அனுப்பிய பாஜக அரசும் அவரது புலம்பலை காது கொடுத்து கேட்டதாக தெரியவில்லை.

தெலுங்கானா அரசை பகைக்க
ஆளுநருக்கு ஆதரவாக தெலுங்கானா அரசை பகைக்க நினைத்தால் ஒட்டு மொத்த தெலுங்கானாவும் பற்றி எரியும். பாஜக என்ற பெயரில் யாரும் நடமாட முடியாத நிலை உருவாகிவிடும் என்பதெல்லாம் ஒன்ரிய அரசுக்கு அதன் புலனாய்வுத் துறை தகவல் அளித்திருக்கும். வீண் வம்பை விலைக்கு வாங்க விரும்பாத ஒன்றிய அரசு அம்மையார் அலறலுக்கு செவி சாய்க்கவில்லை. இதை எல்லாம் அறியாது ஆளுநர் தமிழிசை ஒன்றிய அரசு பின்னால் இருப்பதாக கருதி பிதற்றுகிறார்! ஆளுநருக்கான அதிகாரம் என்ன என்பதுகூட புரியாது தமிழகத்தின் ஆளுநர் ரவிக்கு இவர் வக்காலத்து வாங்கி பிரபல தொலைகா்காட்சியின் விவாத மேடையில் தோன்றி ஆவேசமாக பேசியுள்ளார்.

வேறு மாநில ஆளுநர்
முதலில் அவர் தமிழ்நாட்டு அரசியலில் வேறு ஒரு மாநில ஆளுநராக இருந்து தலையிடுவதே தவறு! இது போன்ற ஆளுநர்கள் தலையீட்டால் குழப்ப நிலை உருவாகும் என்ற நோக்கில் ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவர் அந்த மாநில்தை சேர்ந்தவராக இருக்கக் கூடாது எனும் நடைமுறை பொதுவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையின் தாத்பர்யத்தை உணராமல் நான் தமிழ்நாட்டில் மூக்கை நுழைப்பேன் என்றெல்லாம் பேசி வருகிறார். தமிழகத்திற்கு என ஆளுநர் ஒருவர் இருக்கும் போது அவரது எல்லைக்குள் ஏன் புதுவை துணை நிலை ஆளுநர் இங்கு மூக்கை நுழைக்கிறார் என்ற கேள்வியின் நியாயத்தை உணராது, அடிக்கடி தமிழகத்தின் விவகாரங்களில் தலையிடுகிறார். ஆளுநர் ரவி விவரம் தெரியாதவர் போல அவருக்காக இவர் பேச முயல்கிறார். எல்லை தாண்டும் தமிழிசையின் செயல் தமிழக ஆளுநர் ரவியை எத்தனை சங்கடப்படுத்தும் என்பதையும் அவர் உணரவில்லை.

ரப்பர் ஸ்டாம்ப்
ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்பு அல்ல. இரும்புக் கரங்கள் என வாதிடுகிறார். இந்த ஆளுநர்களின் நியமன உத்தரவில் கையெழுத்திடும் குடியரசுத் தலைவரையே ரப்பர் ஸ்டாம்ப் என்று குறிப்பிட்டு அதனை ஒட்டிய வாத பிரதிவாதங்கள் இன்று வரை நடக்கிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் அரசியல் சாசனத்தை மதித்து ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து வருகிறது. அவருக்கென வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் அவர் செயல்பட்டால் அவருக்கு எதிராக யாரும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அரசு மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றும் போது அதை செயல்படுத்த முடியாது என தடுத்திடும் வகையில் ஆளுநர் செயல்பட்ட போது கூட தமிழக முதல்வர், அமைச்சர்களோடு சென்று பல முறை சந்தித்து விரைவுப்படுத்தக் கோரியுள்ளார்.

தீர்மானங்கள்
சட்டமன்றத்தில் ஆளும் கட்சி, முக்கிய எதிர்க்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் பாஜக தவிர இணைந்து நிறைவேற்றிய தீர்மானங்களை எல்லாம் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது ஒன்றே ஆளுநர் எந்த நோக்கில் பயணிக்கிறார் என்பதை எடுத்துக் காட்டவில்லையா? 234 உறுப்பினர்கள் ஆதரித்து நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தில், ஆளுநரின் ஒப்புதல் தாமதப்படுத்தப்படுகிறது. அதாவது, பாஜகவின் 4 உறுப்பினர்கள் சார்பில் ஆளுநர் செயல்படுகிறார்.அவர்கள் ஏற்காத தீர்மானத்தை தன்னால் ஏற்றிட இயலாது என்று காட்டிடும் வகையில் ஆளுநர் செயல்படத் தொடங்கினால், இந்திய ஒன்றியம் ஏற்றுள்ள ஜனநாயகம், அரசியல் அமைப்புச் சட்டம் எல்லாம் கேலிக்கூத்தாகக் கருதப்படாதா?

ஆளுநரின் சொந்த கருத்து
சட்டமன்றங்களில் ஆளுநர் உரை நிகழ்த்தப்படுகிறதே அது என்ன ஆளுநரின் சொந்தக் கருத்தைக் கூறிடும் உரையா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினால் தயாரிக்கப்பட்ட உரையைத்தான் அவர் படித்திட முடியும்! அது ஒன்றே ஆளுநர் அரசு நிர்வாகத்தில் தனது சொந்த கருத்துக்களை திணிக்க முடியாது என்பதை தெளிவாக்கிடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு ஒத்துழைத்து, மக்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் அரசியல் நடத்தாமல் ஆக்கப்பூர்வ அரசியலை நடத்திட ஆளுநர்கள் முனைப்பு காட்டிட வேண்டும். தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையேயுள்ள பிரச்சினையில் தமிழிசை, அவரது கூற்றுப்படி மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தெலுங்கானாவில் பட்டஅடி
தெலுங்கானாவில் பட்ட அடிக்கு தமிழ்நாட்டில் வந்து வீரம் காட்டக் கூடாது! உங்களது எல்லை தெலுங்கானா. அங்கே ஜம்பம் சாயவில்லை என்பதால், தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்து வீரம் காட்டாதீர்கள். பொறுமையை பயம் என எண்ணி விடாதீர்கள். எரிமலைகள் பொறுமையாகத்தான் இருக்கும். வெடித்தால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications