தமிழில் மட்டுமே கையெழுத்து போடணும்.. மாணவர்களுக்கு பறந்த உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி
சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களும் தமிழில் கையெழுத்து போட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழில் பெயர் எழுதும் போது, இனிஷியல் என்று சொல்லப்படும் முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறை அமலில் இருக்கிறது. இதுதொடர்பாக அவ்வப்போது நினைவூட்டப்பட்டு வருகிறது. பொதுமக்களும் பொதுப்பயன்பாடுகளில் இந்த முறையை பின்பற்ற ஊக்குவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள படி கண்டிப்பாக தமிழ் மொழியை தான் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 2021ஆம் ஆண்டே அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை நினைவூட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2021ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையைக் குறிப்பிட்டு, பள்ளிக்கல்வி இயக்குநர், அறிக்கை வெளியிட்டுள்ளார், தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சார்பில், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பணியாற்றி வரும் அனைத்து இயக்குநர்கள், சென்னை பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர்கள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், "பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அனைத்து இடங்களிலும் தங்களின் பெயர்களை எழுதும் போதும், கையெழுத்திடும் போதும் கண்டிப்பாகத் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று மீண்டும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" எனக் கடந்த 2021 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையைக் குறிப்பிட்டுப் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வருகைப்பதிவு, ஆவணங்களிலும் தமிழில் கையொப்பமிடவும், மற்றும் மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கையெழுத்து மட்டுமல்ல, இனிஷியல் என்று சொல்லப்படும் முன் எழுத்துகளையும் தமிழில் தான் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பலமுறை அரசாணைகள் வெளியிடப்பட்டும் அரசு அலுவலர்கள் கூட முழுமையாக தமிழில் எழுதும் பழக்கத்திற்கு வரவில்லை. இந்த சூழலில் முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு ஊழியர்களும் அனைத்து இடங்களிலும் தங்களின் பெயர்களை எழுதும் போதும், கையெழுத்திடும் போது முன்னெழுத்தையும் சேர்த்து தமிழில் எழுத வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் தமிழில் பெயர் எழுதும் போது, அதன் முன்னெழுத்தை தமிழிலேயே எழுதும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி மாணவர்களின் சான்றிதழை பெற்றோர் கையெழுத்திட்டு பெறும் போது முன்னெழுத்து மற்றும் கையெழுத்தை தமிழிலேயே இட வேண்டும். இவ்வாறு பள்ளி பருவத்திலேயே நடைமுறைப்படுத்துவதால் மாணவர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடும். இதுதவிர பொதுமக்கள் அதிகம் அணுகக்கூடிய மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மின்சார வாரியம், போக்குவரத்து துறை, பத்திரப் பதிவுத் துறை, வருவாய்த் துறை,
வணிகவரித் துறை, சமூக நலத்துறை, காவல் நிலையம், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆகியவற்றில் பொதுமக்கள் பூர்த்தி செய்து அளிக்கும் விண்ணப்பங்களில் முன்னெழுத்து மற்றும் கையெழுத்து ஆகியவை தமிழில் இடம்பெற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications