மயிலாப்பூரில் பரபரப்பு.. விடிய விடிய தூங்காமல் தவித்த சிட்டி சென்டர் மக்கள்.. ஆவேச மறியல்
சென்னை மயிலாப்பூர் மக்கள் மறியல் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்
சென்னை: மயிலாப்பூர் சிட்டி சென்டரில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டதால், பொதுமக்கள் நடவடிக்கை கோரி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் கடந்த 3 நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது.. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.. வீடுகளுக்குள்ளும் மழை தண்ணீர் புகுந்துவிட்டதால், அவைகளை அகற்ற குடியிருப்பு மக்கள் போராடி வருகிறார்கள்..
குறிப்பாக, வடசென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாகவே தூங்காமல் விடிய விடிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்..

அதிருப்தி
சிலர் தங்கள் உடைமைகளை அப்படி அப்படியே விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்கிறார்கள். மற்றொருபுறம், மாநகராட்சி ஊழியர்கள், கடந்த 3 நாட்களாகவே மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாழ்வான தெருக்கள், சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற மட்டுமே, மாநகராட்சி சார்பில் அலுவலர்கள், பணியாளர்கள் என மொத்தம் 23 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள்
எனினும் பல இடங்களில், நிவாரண மற்றும் மீட்பு பணிக்கான கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.. அந்த வகையில் மயிலாப்பூர் பகுதியும் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.. இங்குள்ள வி.சி. கார்டன் பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டது.. மேலும் சாலைகளிலும் மழை நீர் தேங்கி நின்றது..

அவதி
இதனால் பாதிப்படைந்த அந்த பகுதி மக்கள், உ டனடியாக அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் அவர்கள் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் திடீரென நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த தகவலறிந்த அபிராமபுரம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானம் பேசிவிட்டு சென்றனர்..

மறியல்
ஆனாலும் சிட்டி சென்டர் பகுதியில் மழைவெள்ள பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது.. இதனால், அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துவிட்டது.. இதனால் இரவெல்லாம் தூங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.. இன்று காலையிலும் அதிகாரிகள் வந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால், சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்... இதையடுத்து, சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications