சீமான் 57-வது பிறந்த நாள்.. சோசியல் மீடியாவில் நாம் தமிழர் தம்பிகள் செய்த 'சம்பவம்' - ஒரே அதகளம்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 57-வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளமான எக்ஸில் #அடுத்து_நாமதான்ணே என்ற முழக்கத்தை டிரெண்டிங் செய்துள்ளனர் அவரது தம்பிகள்.
சீமான்.. தமிழ்நாட்டு அரசியலில் இன்று தவிர்க்க முடியாத ஒரு சக்தி. ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் தமிழ்நாட்டில் ஈழ விடுதலை குறித்து பகிரங்கமாக பேசிவிட முடியாது. தடா, பொடா என அடக்குமுறை சட்டங்கள் அமலில் இருந்த காலம். தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு தலைவர்கள் பழ.நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் என பலரும் சிறைவாசம் அனுபவித்தனர். ஈழ விடுதலை ஆதரவு களத்தில் கர்ண கொடூர நாட்கள் இவை. இது தமிழ்நாட்டு அரசியலில் ஈழ விடுதலை ஆதரவு களத்தின் மிக முக்கியமான காலகட்டமாக சொல்லப்படும்.

திராவிடர், இடதுசாரி மேடைகளில்..: இதற்கு பிந்தைய அதாவது 2002-ம் ஆண்டு இலங்கையில் அமைதி பேச்சு நடத்தப்பட்டு ஒப்பந்தம் அமலுக்கு வந்த நாள் முதலான காலகட்டம் ஒருவிதமான தளர்வு இருந்தது. தமிழ்நாட்டில் இருந்து பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் என பலரும் இலங்கைக்குப் போய் தமிழர் பகுதி நிர்வாகத்தை பார்த்து வந்தனர். இன்னும் சிலர் அங்கு தங்கி இருந்து பல்வேறு பயிற்சிகளையும் கொடுத்தனர். இலங்கை தமிழர் தலைமை அழைப்பின் பேரில் பல தலைவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஒருசிலர் விரும்பி அழைத்து செல்ல கேட்டுக் கொண்டும் இலங்கை சென்று திரும்பினர். இது தமிழ்நாட்டு அரசியலில் ஈழ விடுதலை ஆதரவு களத்தில் நெகிழ்வு கால கட்டம். இந்த கால கட்டத்தில்தான் திராவிடர் இயக்க மேடைகளில் 'நான் பெரியாரின் பேரன், மார்க்ஸின் மாணவன், ஈழத் தலைவரின் தம்பி' என இளைஞர் ஒருவர் பகுத்தறிவு கருத்துகளை பேசிக் கொண்டிருந்தார். அவரே திராவிடர் இயக்க, இடதுசாரி மேடைகளில் சிறப்பு பேச்சாளராகவும் உருவெடுத்தார். திரைத்துறையில் ஒரு சில படங்களைதான் இயக்கியவராக இருந்தாலும் அவருக்கு திராவிடர் இயக்க மேடைகளும் இடதுசாரி மேடைகளும் பெரும் அடையாளம் கொடுத்தன. அந்த இளைஞர்தான் இன்று 57-வது பிறந்த நாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தவிர்க்க முடியாத சக்தி சீமான்: 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்துக்கு முந்தைய ஆண்டுகளில் தொடங்கி இன்றளவும் பம்பரமாக சுழன்று கொண்டே இருக்கிறார் சீமான். பொதுவெளியில் சீமான் முன்வைக்கும் தத்துவம், அதன் செயல்பாட்டு தன்மை ஆகியவை குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள். ஓட்டு அரசியலில் தனித்தே களம் காண்கிற உறுதித்தன்மை குறித்து பல கேள்விகள். நாம் தமிழர் எனும் இயக்கம் தொடங்கி இன்று கட்சியாக உருவெடுத்து நிற்பது வரை எண்ணற்றோர் பிரிந்த பின்னரும் புதிய புதிய இளைஞர்களை ஈர்க்கிற சக்தி கொண்டவராக சீமான் நிற்கிறார். தேர்தல் களத்தில் ஒருநாள் வெல்வோம்; ஒருநாள் தமிழ் தேசிய அரசியல் வெல்லும் என்கிற நம்பிக்கையோடு தனித்தே களம் காண்கிறார் சீமான். இன்றைக்கும் தமிழ்நாட்டில் நாள்தோறும் கட்சி ஆலோசனை கூட்டங்கள், நாள்தோறும் செய்தியாளர் சந்திப்பு என சூறாவளியாக இயங்கிக் கொண்டிருக்கிறார் சீமான். சர்ச்சைகளோடு சண்டை செய்கிறவராக இருந்தாலும் திராவிட கட்சிகளின் தொடக்க கால "அண்ணே, தம்பி, அக்கா" என்கிற மக்களுடனான அரசியல் உரையாடலை இடைவிடாமல் முன்னெடுக்கிறார். சீமானின் எதிர்கால அரசியல் வெளிச்சம் அவர் நேசிக்கும் தாய், தகப்பன், அப்பத்தா, தங்கச்சி, தம்பிமார்களிடம்தான் இருக்கிறது!
அண்ணே பிறந்த நாள் வாழ்த்துகள்!












Click it and Unblock the Notifications