அதென்ன பாஜகவை திமுக ஆதரித்தாலும் கொள்கையோடு ஆதரிக்கும்? முதல்வர் ஸ்டாலினுக்கு 'நாம் தமிழர்' கேள்வி!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "பாஜகவுடன் ரகசிய உறவு வைத்திருப்பதாகக் கிளப்பி விடுகிறார்கள். அப்படி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. திமுக எதிர்த்தாலும் கொள்கையோடு எதிர்க்கும்; ஆதரித்தாலும் கொள்கையோடு ஆதரிக்கும்" என கூறியிருப்பது குறித்து நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்பி இருக்கிறது.
சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்காதது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராச பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றது தொடர்பாகவும் விளக்க அறிக்கை வெளியிட்டிருந்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிக்கையை முன்வைத்து நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி இருக்கிறார். இது தொடர்பான இடும்பாவனம் கார்த்திக் பதிவு: ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை? எனும் கேள்விக்கு, இதனை நாங்கள் நடத்தவில்லை; ஒன்றிய அரசுதான் நடத்தியது என விளக்கம் அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
ராகுலை அழைக்கவில்லை: மத்திய அரசு நடத்தும் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுத்து நீங்கள் ஏன் அழைத்தீர்கள்? அரசின் எந்தப் பதவியிலும் இல்லாத அண்ணாமலையை, ரஜினிகாந்தை, கமலஹாசனை எந்த அடிப்படையில் அழைத்தீர்கள்? அவர்களை எல்லாம் அழைக்க முடியும்போது ராகுல் காந்தியை அழைக்க முடியாதா?
பாஜக புகழ வேண்டிய அவசியம் என்ன?: நாணய வெளியீட்டு நிகழ்வில், முதல்வர் ஸ்டாலினைவிட கருணாநிதியை அதிகப்படியாகப் புகழ்ந்தது பாஜக அமைச்சர் ராஜ்நாத் சிங்தான். அவர் நினைத்திருந்தால், கருணாநிதியின் இலக்கியப்பணி, பொது வாழ்க்கை அனுபவம் என சடங்குக்கு சிலவற்றை எடுத்துக்கூறி, அவருக்கும், தனக்குமான தனிப்பட்டப் பழக்க வழக்கத்தை மட்டுமே பேசி சென்றிருக்கலாம். அவ்வாறு செய்யாது, கருணாநிதியின் ஆட்சிப்பணி குறித்தும், அரசியல் பங்கேற்பு குறித்தும் பேசி, திமுகவினரே வியக்கும்வண்ணம் புகழ்மாலை சூட்டியிருக்கிறார் ராஜ்நாத் சிங். இது பெருந்தன்மையினாலோ, மேடை அலங்காரத்துக்காகவோ பேசப்பட்டது இல்லை; அப்பட்டமான அரசியல்!
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பாஜக தலைவர்கள் புகழ்ந்தார்களென்றால், அதிமுக பலவீனமாக இருக்கும் வேளையில் அவர்களது வாக்காளர்களைத் தன்வசப்படுத்தலாம் எனும் கணக்கு அதில் ஒளிந்திருந்தது. ஆனால், திமுக வலிமையாக இருக்கும் வேளையில், கருணாநிதியைப் புகழ வேண்டிய அவசியம் என்ன?
ராஜ்நாத்சிங் புகழாரம்: அரசியல் இலாப நட்டக்கணக்கு இல்லாது ஒரு சிறிய நகர்வைக்கூட பாஜக செய்யாது என்பதை அவர்களின் அரிச்சுவடியை அறிந்தவர்கள்கூட கூறுவார்கள். அப்படி இருக்கையில், ராஜ்நாத் சிங்கின் இன்றையப் பேச்சு தற்செயலானது அல்ல! இன்னும் சொல்லப் போனால், தமிழ்நாட்டில் திமுக எதிர்ப்பு அரசியலை தீவிரமாகச் செய்து வந்த பாஜக, இனி அதனை செய்ய முடியாத அளவுக்கு அமைந்திருந்தது ராஜ்நாத் சிங்கின் பேச்சு.

அதேபோல, இன்றைய நிகழ்வை அரசியல் கடந்த நிகழ்வென்று ஒருபோதும் கருத முடியாது. ராஜ்நாத் சிங்கோடு ராகுல் காந்தியோ, மல்லிகார்ஜுன கார்கோ பங்கேற்று இருந்திருந்தால், அவ்வாறு கருத வாய்ப்புண்டு. அவர்கள் பங்கேற்றால் ராஜ்நாத் சிங்குக்கு Comfortable ஆக இருக்காது எனக் கருதியே, ராகுல் காந்திக்கு திமுக தரப்பில் அழைப்பு விடுக்காது திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது திமுக!
அதென்ன ஆதரித்தாலும்?: பாஜகவுடன் ரகசிய உறவு வைத்திருப்பதாகக் கிளப்பி விடுகிறார்கள். அப்படி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. திமுக எதிர்த்தாலும் கொள்கையோடு எதிர்க்கும்; ஆதரித்தாலும் கொள்கையோடு ஆதரிக்கும் - முதல்வர் ஸ்டாலின்
பாஜகவுடன் எந்தக் காலத்திலும் தேர்தல் உறவு இல்லை; கூட்டணி இல்லை என எளிமையாக சொல்லிருக்கலாம். அதைவிடுத்து, 'ஆதரித்தாலும் கொள்கையோடு ஆதரிக்கும்' என பொடி வைத்துப் பேசுகிறாரே முதல்வர் ஸ்டாலின்?! சரி இல்லையே!!












Click it and Unblock the Notifications