நெல்லையில் போட்டியிடாதது ஏன்? "அதிமுக கேட்டாங்க! விட்டுக் கொடுத்துட்டோம்!" நயினார் நாகேந்திரன்
சென்னை: திருநெல்வேலி தொகுதியை விட்டுவிட்டு சாத்தூரில் போட்டியிடுவது ஏன் என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் எப்போது வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்பதையும் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 சீட்கள் கிடைத்துள்ளன. திருப்பரங்குன்றத்தை பாஜக கேட்ட நிலையில் அதை அதிமுகவே வைத்துக் கொண்டது. இந்த நிலையில் எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை காண்போம்.

மயிலாப்பூர்
தளி
மொடக்குறிச்சி
உதகை
அவிநாசி
திருப்பூர் தெற்கு
கோவை வடக்கு
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை
திருப்பத்தூர்
மதுரை தெற்கு
சாத்தூர்
திருச்செந்தூர்
வாசுதேவநல்லூர்
ராதாபுரம்
நாகர்கோவில்
விளவங்கோடு
ஆவடி
திருவண்ணாமலை
தஞ்சாவூர்
திருவாரூர்
அறந்தாங்கி
ராசிபுரம்
ராமநாதபுரம்
பத்மநாபபுரம்
மானாமதுரை
குளச்சல்
ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்கினார். இதையடுத்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பேர் அடங்கிய பட்டியல் தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்டிப்படையில் பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்.
அவர் தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு வேட்பாளர்களை பியூஷ் கோயல் அறிவிப்பார் என தெரிகிறது. இந்த நிலையில் நெல்லை எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன் சாத்தூரில் போட்டியிடுகிறார் என தகவல்கள் வெளிவந்தன.
இதை அவரும் உறுதிப்படுத்தினார். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி பட்டியலிலும் திருநெல்வேலி தொகுதி இல்லை. இந்த நிலையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கூறுகையில், நெல்லையில் தாங்கள் போட்டியிட வேண்டும் என அதிமுக கேட்டுக் கொண்டதால் அவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டோம். அதிமுக போட்டியிட்ட சாத்தூரில் நான் போட்டியிடுகிறேன். "ஊருக்கே ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளைதான்" என்பதை போல் நான் தொகுதி மாறினாலும் நெல்லை மக்கள் மீதான அன்பும் பாசமும் குறையாது. நான் அவர்கள் வீட்டுப் பிள்ளை. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி சாத்தூர் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய போகிறேன் என அறிவித்தார்.












Click it and Unblock the Notifications