தமிழ்நாடு என சிலப்பதிகாரத்திலேயே இருக்கிறது.. ஆளுநர் சர்ச்சை நாயகனாக திகழ்கிறார்- டிடிவி தினகரன்
சென்னை: தமிழ்நாடு தமிழகம் என்று சாதாரணமாக சொல்கிறோம், தமிழ்நாடு பெயரைக்கூட இப்படியெல்லாம் பேசுவது உண்மையிலேயே அவரது பதவிக்கு அழகாக இருக்கிறதா என்பது தெரியவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக ஆளுநர் என்றாலே சர்ச்சை நாயககானத்தான் இருக்கிறார். அவருடைய பேச்சு எல்லாம் சர்ச்சையாகத்தான் இருக்கிறது.

5 வருடம் இருந்து விட்டு
தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டினார் என்றால் சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரத்திலே தமிழ்நாடு என்ற வார்த்தை உள்ளது. தமிழ்நாடு தமிழகம் என்று சாதாரணமாக சொல்கிறோம். தமிழ்நாடு பெயரைக்கூட இப்படியெல்லாம் பேசுவது உண்மையிலேயே அவரது பதவிக்கு அழகாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆளுநர் என்பவர் ஒரு 5 வருடம் இருந்து விட்டு செல்லக்கூடியவர். அவரது பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டால் அவர் பேசுவதையே நிறுத்திவிடுவார். ஆளுநருடைய செயல்பாடுகள் உண்மையிலேயே வருத்தம் அளிப்பதாகத்தான் உள்ளது" என்றார்.

மக்கள்தான் தலைவர்களை உருவாக்க முடியும்
ஜெயலலிதா குறித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன் பேசியது குறித்து செய்தியாளர்கள் டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன் கூறியதாவது:- தலைவர்களை யாரோ ஒரு சில தனிநபர்கள் எல்லாம் உருவாக்க முடியாது. காலம், நேரம் தொண்டர்கள், மக்கள்தான் தலைவர்களை உருவாக்க முடியும். தனிநபர்களால் உருவாக்க முடியாது. அவர்கள் கைப்பாவையாக செயல்படுத்த நினைத்தார்கள்.

பதவிக்காக போய் இருக்கிறார்
ஜெயலலிதா சுதந்திரமான பெண்மணி. இவர்கள் நினைத்த மாதிரி இல்லாததால் வெளியேறி அதன்பிறகு 1991 ல் ஜெயித்த பிறகு எப்படியெல்லாம் சரண்டர் ஆனார் என்பது தெரியும். அதிமுக தொண்டர் என்பதையும் தாண்டி எம்.ஜி.ஆர் மன்ற தொண்டராக வந்த கே.கே எஸ் ஆர் ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர் யாரை தீய சக்தி என்று சொன்னாரோ அந்தக் கட்சியில் பதவிக்காக போய் இருக்கிறார். வயதில் மூத்தவரான அவர், ஜெயலலிதா குறித்து இப்படியெல்லாம் பேசுவது தவறு என்று அவரே உணரும் காலம் நிச்சயம் வரும்.

திராவிட மாடல் ஆட்சியில்..
திமுக ஆட்சி இருப்பதால் அவர்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக இப்படி பேசலாம். திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் ஒரு அங்கம் என நான் நினைக்கிறேன். அமைச்சர்கள் என்ன பேசுவார்களோ என்று தூங்கி எழுந்து இருக்கவே எனக்கு பயமாக உள்ளது என முதல் அமைச்சர் கூறியதில் இதுவும் சேரும் என்று நினைக்கிறேன். நேற்று இரவு முதல் அமைச்சர் தூங்காமல்தான் இருந்து இருப்பார் என்று நினைக்கிறேன். இதையெல்லாம் கண்டு கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதாவை ராட்சசி என்று..
முன்னதாக, திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஜெயலலிதாவை ராட்சசி என்றும், ஜெயலலிதாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு என்று பேசினார். மேலும், அந்த பாவத்தின் பலனை 10 ஆண்டு காலம் அனுபவித்தோம் என கடுமையாக விமர்சித்திருந்தார். அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் இந்தப் பேச்சு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications