தமிழிசை சவுந்தரராஜன் பற்றி அவதூறு : நாஞ்சில் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு
தமிழிசை சவுந்தரராஜனை மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் நாஞ்சில் சம்பத், கொச்சையாக விமர்சனம் செய்துள்ளதாக புகார்தாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
சென்னை: தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக விமர்சித்ததாக நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. பெண் கொடுமை தடுப்பு சட்ட வழக்கை பல்லாவரம் போலீசார் விசாரிக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2017ல் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
இதையடுத்து, பல்லாவரம், பம்மல், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக புகார்கள் கொடுக்கப்பட்டு பெண் கொடுமை பாதுகாப்பு சட்டப் பிரிவின் கீழும், அவதூறு சட்டப் பிரிவின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் கடந்த வாரம் நீதிபதி என்.சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தன. அப்போது நாஞ்சில் சம்பத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'தனிப்பட்ட முறையில், அந்த தலைவரை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்று கூறியிருந்தார்.
அவர் பரப்பும் கொள்கைக்கு எந்த ஆதரவும் கிடையாது அத்தகைய தலைவரை பின்பற்றும் எவருக்கும் பலன் கிடையாது என்று தான் விமர்சித்தேன். என் பேச்சால் அவர் மனம் புண்பட்டிருந்தால், அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
நாஞ்சில் சம்பத் தரப்பில் தாக்கல் செய்த மனுவை ஏற்று வழக்குகளை ரத்து செய்யக் கூடாது எனவும் வழக்கை விசாரிக்க கோரியும் பாஜக வழக்கறிஞர் அலெக்ஸ் முறையிட்டார். இதையடுத்து வழக்கு டைரியை தாக்கல் செய்வதற்காக விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.
இதனிடையே இன்றைய தினம் நீதிபதி என்.சதீஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் கொடுமை பாதுகாப்பு சட்டப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதில் உள்நோக்கம் உள்ளதாகவும், வேண்டுமென்றே இந்த பிரிவை சேர்த்துள்ளதாகவும் நாஞ்சில் சம்பத் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழிசையை மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் நாஞ்சில் சம்பத் கொச்சையாக விமர்சனம் செய்துள்ளதாக புகார்தாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். சதீஷ் குமார் வழக்கை ரத்து செய்ய மறுத்ததுடன், பெண் கொடுமை தடுப்பு சட்ட வழக்கை பல்லாவரம் போலீசார் விசாரிக்கலாம் என்றும் மற்ற வழக்குகள் தொடர்பான ஆவணங்களையும் புகார்தாரர்கள் பல்லாவரம் போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications