ராமநாதபுரம் டூ குமரி வரை கொந்தளிக்கும் கடல்.. ராட்சத அலைகள் எழும்பும்! கடல்சார் மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டின் கடற்கரைகளில் ராட்சத அலை எழும்பும் என்றும், கடல் சீற்றமாக இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய கடல்சார் மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ஆண்டு தோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. மொத்தமாக 61 நாட்கள் என நீடிக்கப்பட்ட தடைக்காலம், ஜூன் 14ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்திய கடல்சார் மையத்தின் எச்சரிக்கை மீனவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய கடற்கரைகளில் சுமார் 2.2 மீ வரை அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதாகவும், நாளை இரவு 11 மணி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் இந்திய கடல்சார் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது ஏற்கெனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது தவிர கடற்கரையில் படகுகளை நிறுத்தி வைத்துள்ள மீனவர்கள் அவற்றை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளும் கடலுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே போல கடலில் விளையாடிக்கொண்டிருந்த பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நாகர்கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த பயிற்சி மருத்துவர்கள் சிலர் திருமணத்தை முடித்துவிட்டு லெமூர் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென ராட்சத அலை இவர்களில் 6 பேரை அடித்துச் சென்றது.
இதை பார்த்த மீனவர்கள் சிலர் உடனடியாக அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் 2 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. மீட்கப்பட்டவர்களை அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல, அலையில் சிக்கிய 4 பேரும் சற்று நேரத்தில் சடலமாக கரை ஒதுங்கினர். இந்த சம்பவம் கன்னியாகுமரி மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு காரணம் கள்ளக்கடல் நிகழ்வுதான் என்று விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். அதாவது எந்தவித எச்சரிக்கையும் இன்றி திடீரென பலத்த காற்று மற்றும் ராட்சத அலை எழும்பும். இப்படி எழுந்த அலைதான் பயிற்சி மருத்துவர்களை இழுத்து சென்றிருக்கிறது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து கடல் சீற்றம் குறித்த எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications