பெரிய ஆபத்து! சென்னையின் 50% சாலைகள் வெள்ளத்தால் மூழ்கும் அபாயம்.. மழை வேற பொளக்குதே! புது அலர்ட்
சென்னை: இப்போது மழைக் காலம் தொடங்கி இருக்கும் நிலையில், சென்னையில் இன்னுமே பல்வேறு இடங்களில் மழை பெய்யும் ஆபத்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. அதிலும் குறிப்பாகத் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. முன்பெல்லாம் மழை பெய்தாலே நகரில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

ஆனால், இப்போது சென்னையில் நிலைமை எவ்வளவு பரவாயில்லை என்று சொல்லலாம். நகரின் முக்கிய பகுதிகளில் மழை பெய்தாலும் கூட கொஞ்ச நேரத்தில் மழை நீர் வடியத் தேவையான வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னை: இருப்பினும், பெருநகர சென்னையின் முக்கிய சாலைகள், நெடுஞ்சாலைகளில் இன்னுமே சுமார் 50.6% வெள்ள அபாயத்தில் உலக வங்கி உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.. இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை eco-zones ஆகச் சென்னை மாநகராட்சி பட்டியலிட்டு வருகிறது. இந்த பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் வகையில் புதிய கட்டுமானங்கள் ஊக்குவிக்கப்படாது.
சென்னையின் மூன்றாவது வளர்ச்சி பிளான் குறித்த ஆவணம் தயாரிக்கும் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2022இல் உலக வங்கி நிதியுதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய முக்கியமான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை அடையாளம் காண உதவியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
50% சாலைகள் ஆபத்து: அதில் தான் 50% arterial சாலைகள் ஆபத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது மாங்காடு அருகே உள்ள வெளிவட்டச் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. இதனால் எண்ணூர் துறைமுகத்திற்கான சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படும். மேலும், அடையாறு படுகை, கூவம் படுகை மற்றும் கோவளம் படுகையில் உள்ள சாலைகளிலும் வெள்ள அபாயம் அதிகமாக இருப்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.
இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "நீர்நிலைகள், தாழ்வான பகுதிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் இந்த பகுதிகளை eco-zonesஆக அறிவிக்க வேண்டும். இந்த இடங்களில் புதிய வளர்ச்சி திட்டங்களை ஊக்குவிக்கக் கூடாது..
இந்த இடங்கள் நீர்நிலையை ரீசார்ஜ் செய்யும் திறன் கொண்ட திறந்தவெளியாகவே இருக்க வேண்டும். இப்படி நீர்நிலைக்குத் தண்ணீரை ரீசார்ஜ் செய்யும் இடங்களை Sponge City என்பார்கள். சென்னையில் மொத்தம் 50 இடங்களில் இதை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இதை உருவாக ஆகும் செலவும் குறைவு" என்றார்.
மழைநீர் வடிகால் பணிகள்: வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதியை விரிவுபடுத்த வேண்டும் என்பதை வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள். சென்னையின் அனைத்துப் படுகைகளிலும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளைச் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோல இயற்கை நீர்நிலைகளை மேம்படுத்தும் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கும் முக்கிய வழி என்பதையும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
சென்னையின் வளர்ச்சித் திட்டத்தில், நகரின் இயற்கையான நீர் மற்றும் பசுமைப் பகுதிகளைப் பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், இணைக்கவும் சரியான திட்டம் இல்லை என்பதே பிரச்சினையாக உள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.. ஆனால், சென்னை நிலப்பரப்பில் இப்போது 2% மட்டுமே அதிகாரப்பூர்வமாகப் பூங்காக்களாக இருக்கிறது. 24 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமே காடுகளாகவும், 91.31 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமே நீர்நிலைகளாகவும் உள்ளது. இந்தளவுக்குக் குறைவான பூங்காக்கள் இருப்பதும் வெள்ள பாதிப்புகள் ஏற்படக் காரணமாக இருக்கிறது.
பள்ளிக்கரணை: மேலும், பள்ளிக்கரணை போன்ற சுற்றுச்சூழலுக்கு முக்கியமான பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது அவசியம் என்பதையும் வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள். இருப்பினும், இதுபோன்ற பகுதிகளில் குப்பை அதிகம் கொட்டப்படுவதாலும் கண்மூடித்தனமாக விரிவாக்க பணிகளாலும் இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு முக்கியமான பகுதிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அதேபோல அதீத கனமழைக்கும் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திற்கும் பருவநிலை மாற்றமும் முக்கிய காரணம் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே, தற்போது இருக்கும் சூழலுக்கு ஏற்ப மழைநீர் வடிகால்களையும் திட்டமிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.












Click it and Unblock the Notifications