நீட்: மாணவரின் தற்கொலை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.. சட்டபோராட்டம் தொடங்கிவிட்டது- முதல்வர் ஸ்டாலின்
சென்னை: நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நாடு முழுக்க இன்று நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் தமிழ்நாடு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுக்க நீட் தேர்வை எழுத நாடு முழுவதும் 16 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் இன்று 1.12 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இந்த நிலையில் நீட் தேர்வு அச்சத்தில் மேட்டூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தனுஷ் (19) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரங்கல்
இந்த நிலையில் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், மாணவர் தனுஷ் மரணத்துக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்; நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது""நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேறும்"நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

அறிக்கை
அந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தி - அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு கிராமப்புற - நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மனமுடைந்து தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிடிவாதம்
நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களைப் புரிந்து கொள்ளாத ஒன்றிய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வர வேண்டிய மாணவ - மாணவிகள் தற்கொலைக்கு காரணமாகத் தொடர்ந்து அமைந்து வருகிறது. நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள் லீக், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், மாணவ - மாணவிகள் தற்கொலைகளும் ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை என்பது, கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் மேலும் வலுவடைய வைக்கிறது.

சிரமம்
இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது. இதனை இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாக் கருதி அனைத்து மாநில முதலமைச்சர்களின் கவனத்துக்கும் கொண்டுச் சென்று ஆதரவு திரட்டி, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தளர வேண்டாம்
மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துத்தரும் பெரும் பொறுப்பும் கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பினை உணர்ந்து, நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும்வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுகிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாளை அவையில் இது தொடர்பாக தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னாள் நீதிபதி ஏ கே ராஜன் கமிட்டி வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications