அரசு பஸ்களில் புது வசதி.. அமைச்சர் சிவசங்கரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! பயண கட்டண சீட்டை ஆன்லைனில் பெறலாம்
சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பயணக் கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை இணையதளம் வாயிலாக பெற்றிடும் புதிய வசதியை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து இருக்கிறார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டு வரும் பயணக் கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை வலைதளம் வாயிலாக பயனாளிகள் பெற்றிடும் திட்டதை முதற்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், செயல்படுத்திட ஏதுவாக தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சட்டசபையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டு வரும் பயணக் கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை வலைதளம் (Internet) வாயிலாக விண்ணப்பித்து, பயனாளிகள் பெற்றிட வழிவகை செய்யப்படும் என அறிவித்தார்.
அந்த அறிவிப்பை தொடர்ந்து, இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு (PTCS) மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) நிறுவனத்துடன் இணைந்து. மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள். தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டையை பெற்றுக்கொள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு. முதற்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்கள்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், ஆண்டுதோறும் 3.237 கண் பார்வை குறையுடையோர்கள், 1,468 மாற்றுத்திறனாளிகள், 1,180 அறிவுசார் குறைபாடுடையோர்கள், 117 சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு உரிய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் (சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்) தமிழ் வளர்ச்சி இயக்ககம் எழும்பூர் ஆகிய அலுவலர்களின் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், கட்டணமில்லா அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் வாயிலாக உரிய அலுவலகம் வந்து செல்லாமல், வீட்டின் அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில் அல்லது tn.e.sevai என்ற வலைதளம் வாயிலாக விண்ணப்பித்து அதற்குரிய ரசீது பெற்றுக் கொள்ளவும். உரிய குறுஞ்செய்தி பெறப்பட்ட பின்பு பயண அட்டையை A4 Sheet (white / colour) / பிளாஸ்டிக் அட்டையில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications