புத்தாண்டு கொண்டாட குவியும் மக்கள்.. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!
சென்னை: புத்தாண்டைக் கொண்டாட பொதுமக்கள், சென்னை மெரினா கடற்கரை சாலையில் குவிந்து வருகின்றனர். சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை, புத்தாண்டு கொண்டாட்டத்தால் களை கட்டியுள்ளது. சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
புது வருடம் பிறப்பதையொட்டி, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக இன்று சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வட்டாரங்களைச் சேர்ந்த மக்கள் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில். புத்தாண்டு பிறப்பதற்கு முந்தைய இரவு சென்னை மெரினா கடற்கரை எப்போதுமே கொண்டாட்டத்தில் திளைக்கும். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வார்கள்.

பாடல்களை ஒலிக்கச் செய்து, நடனமாடி, கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்து மகிழ்வார்கள், இதனால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 அன்று நள்ளிரவு சென்னை மெரினா கடற்கரையில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். அந்தவகையில் இன்று மாலை முதலே ஏராளமான பொதுமக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். எனினும் இரவு 9 மணிக்கு பிறகு மெரினா கடற்கரையில் கடலில் இறங்குவதற்கு பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.
புத்தாண்டை கொண்டாட கடற்கரைக்கு வரும் பொதுமக்களை கடற்கரைக்கு உள்ளே செல்ல அனுமதிக்காமல் அதற்கு வெளியே இருக்கும் சாலைகள் மற்றும் காமராஜர் சாலை அருகே புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மெரினா கடற்கரையில் 15 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இருந்து காவலர்கள் தொலைநோக்கி மூலம் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் இன்று (டிசம்பர் 31) மாலை முதல் சிறப்பு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்கரையை ஒட்டிய பல சாலைகளில் வாகன இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் மெரினா உட்புறச் சாலைகள் முழுமையாக மூடப்பட்டு உள்ளதுடன், காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான பகுதியில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்தச் சாலைகளுடன் இணையும் குறுக்கு வழிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மாற்றுப் பாதைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மெரீனா கடற்கரை, சாந்தோம், மயிலாப்பூர் மற்றும் அடையாறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலை, கிரீன்வேஸ் சாலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தால் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், சென்னை முழுவதும் 19,000 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, நகரின் பல பகுதிகளில் உள்ள 25 முக்கிய மேம்பாலங்கள் மற்றும் பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் காவல்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றி மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications