1 சதவீத ஓட்டு கூட இல்லை..கேப்டனும் இல்லை! ‘ஆண்ட பரம்பரை’ மனநிலையில் தேமுதிக! கூட்டத்தை காட்டி பேரம்?
சென்னை: கடந்த சில மாதங்களாகவே தேமுதிக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வந்த ஒன்று, "2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி?" என்பதுதான். இதற்கு நேரடியாக பதில் அளிக்கும் வகையில், "ஜனவரி 9-ம் தேதி கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம்" என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தொடர்ந்து கூறி வந்தார். அதனால் அந்த மாநாடு, வெறும் கட்சி மாநாடு அல்ல; அரசியல் திருப்புமுனை ஏற்படும் மாநாடாகவே பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் கூட்டணி குறித்து அறிவிக்காத பிரேமலதா, கூட்டத்தை காட்டி பேரத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
அதன்படி, கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் நடைபெற்ற தேமுதிகவில் உரிமை மீட்பு மாநாடு 2.0 மாநாட்டில் பெரும் கூட்டம் திரண்டது. கட்சி நிர்வாகிகளே எதிர்பார்க்காத அளவுக்கு, ஒரு லட்சத்தை தாண்டிய மக்கள் கூடியதாக சொல்லப்படுகிறது.
மேடை அமைப்பு, ஒலிபெருக்கி, கொடிகள், முழங்கிய கோஷங்கள் என மாநாடு முழுக்க அரசியல் சூடு அதிகமாகவே இருந்தது. குறிப்பாக, 7 மணிக்கெல்லா, கூட்டணி அறிவிப்பு என்று பொருளாளர் எல்.கே.சுதீஷ் உறுதியாக சொன்னதும், மேடையிலும், கூட்டத்திலும் எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டது.

கடலூர் தேமுதிக மாநாடு
ஆனால் நேரம் கடந்தும், கூட்டணி குறித்து எந்தத் தெளிவான அறிவிப்பும் வராததால், மேடை மீது கவனம் அதிகரித்தது. 8 மணிக்கு பிரேமலதா மாநாட்டு திடலை சுற்றி வலம் வந்தபோது, முகத்தில் ஒரு திருப்தியும் உற்சாகமும் தெரிந்தது. அதன்பிறகு அவர் பேசிய பேச்சு, எதிர்பார்த்த கூட்டணி அறிவிப்பாக இல்லாமல், அரசியல் கணக்கு போடும் உரையாகவே அமைந்தது. "தை பிறந்தால் வழி பிறக்கும். ஆனால் அவசரப்பட்டு முடிவு எடுப்பது அரசியல் புத்திசாலித்தனம் அல்ல. ஆண்ட கட்சிகளே இன்னும் முடிவு எடுக்காத நிலையில், நாம் மட்டும் ஏன் அவசரப்பட வேண்டும்?" என்ற பிரேமலதாவின் வார்த்தைகள், கூட்டணி அறிவிப்பு தள்ளிப்போனதற்கான விளக்கமாக அமைந்தது.
தேமுதிக கூட்டணி பேச்சு
அதே நேரத்தில், "நம்மை மதிப்பவர்கள் யார் என்பதைப் பார்த்து முடிவு செய்வோம்" என்ற அவரது கூற்று, பேரம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான மறைமுகச் செய்தியாகவே அரசியல் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். அதே நேரத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தை காட்டி பேரத்தை உயர்த்தலாம் என்று மேலிடம் நினைக்கிறது என்ற கருத்துகள் வெளிப்படையாகவே பேசப்பட்டன. அதே நேரத்தில், ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதையே பிரேமலதாவும், எல்.கே.சுதீஷும் அழுத்தமாக பதிவு செய்தனர்.
தேமுதிக பேர அரசியல்
ஆனால் இங்கே தான் ஒரு முக்கியமான விமர்சனம் எழுகிறது. தேமுதிக மேடையில் பேசிய பலர், "நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது", "5 சீட்டு, 10 சீட்டு எங்களுக்கு தேவையில்லை" என்ற 'ஆண்ட பரம்பரை' அரசியல் மொழியை பயன்படுத்தினர். ஆனால் இன்றைய அரசியல் எதார்த்தம் அதைவிட வேறுபட்டதாக இருக்கிறது. 2021 சட்டசபை தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிட்டு, தேமுதிக பெற்ற வாக்குகள் 0.43 சதவீதம் மட்டுமே. அப்போது விஜயகாந்த் உயிரோடு இருந்தார் என்பதும் மறக்க முடியாத உண்மை.
தேமுதிக வாக்கு சதவீதம்
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தபோது, அதிமுக வாக்குகளின் துணையுடன் 2.59 சதவீதம் வரை வாக்கு வங்கி உயர்ந்தது. இதனை தவிர்த்து பார்த்தால், தேமுதிக தனிப்பட்ட வாக்குவங்கி இன்றைக்கு பெரிதாக இல்லை என்பதே அரசியல் கணக்கு. "வாழ்ந்துகெட்ட ஜமீன்தார்" மனநிலை அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் 2016-ல் கலைஞர் கருணாநிதி அழைத்தபோதும் கூட்டணிக்கு செல்லாமல், தங்களே தங்களை ஓரங்கட்டிக் கொண்டதும் ஒரு வரலாறு.
கடலூர் மாநாடு
இன்றைய சூழலில், "நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது" என்று திமுக, அதிமுக இரண்டையும் மிரட்டும் தோரணை, கட்சியை அரசியல் நகைப்பிற்கே உள்ளாக்குகிறது என்றே விமர்சகர்கள் சொல்கிறார்கள். யாரும் கூட்டணியில் சேர்க்கவில்லை என்றால், தேமுதிக இன்றைக்கு 0.2 சதவீதம் கூட வாக்கு வாங்க முடியுமா என்பதே கடினமான கேள்வியாக இருக்கிறது. மொத்தத்தில், கடலூர் மாநாடு கூட்டணி அறிவிப்புக்கான மேடையாக இல்லாமல், பேரத்தை உயர்த்தும் அரசியல் சிக்னலாக மட்டுமே மாறியிருக்கிறது என்பதே தற்போதைய அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications