“NDA கூட்டணியில், ஆட்சியில் பங்கு என்ற பேச்சே இல்லை".. பாஜகவுக்கு ‘கேட்’ போட்ட எடப்பாடி பழனிசாமி!
சென்னை: இண்டியா டுடே கருத்தரங்கில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "NDA கூட்டணியில், ஆட்சியில் பங்கு என்ற பிரச்சனையே இல்லை. கூட்டணியில் இருப்பவர்களும் அவ்வாறு கேட்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று என்.டி.ஏ கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிர்வரும் சட்டசபை தேர்தலையொட்டி கூட்டணி ஆட்சி என்ற குரல் அதிகமாக எழுந்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி ஆட்சி என பேசி வரும் நிலையில், திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளும் கூட்டணி ஆட்சி என்பதை மறுத்து வருகின்றன.
சென்னையில் நடக்கும் இண்டியா டுடே (India Today) கருத்தரங்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்துகொண்டார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "NDA கூட்டணியில், ஆட்சியில் பங்கு என்ற பிரச்சனையே இல்லை. கூட்டணியில் இருப்பவர்களும் அவ்வாறு கேட்கவில்லை" என்று தெரிவித்தார். மேலும், கூட்டணி ஆட்சியா, தனி ஆட்சியா என்ற குழப்பம் திமுக கூட்டணியில் இருப்பதாகவும் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும், 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும், எந்தப் புதிய சக்திகளாலும் அதிமுக-வின் வாக்கு வங்கியைக் குலைக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், தவெக வருகையின் தாக்கம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, “விஜய் திரையில் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், அதற்காக அரசியலிலும் உடனே சூப்பர் ஸ்டாராகி விட முடியாது. சினிமா வேறு, அரசியல் வேறு. அவர் இன்னும் ஒரு தேர்தலைக் கூடச் சந்திக்கவில்லை.
தேர்தல் களத்தில் இறங்கி மக்கள் அளிக்கும் வாக்குகளைப் பெற்றால்தான், ஒரு கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது தெரியவரும். அதுவரை வெறும் கூட்டத்தை வைத்து எதையும் கணித்துவிட முடியாது.
தமிழகத்தில் யார் அரசியல் கட்சித் தொடங்கினாலும், எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லாமல் அரசியல் நடத்த முடியாது. எம்.ஜி.ஆரின் நல்லாட்சியைத் தருவோம் என்று சொன்னால்தான் மக்களிடம் அவர்கள் நெருங்கவே முடியும். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் செதுக்கிய இயக்கம்தான் அதிமுக.
எத்தனையோ பேர் கட்சித் தொடங்கி மறைந்துவிட்டார்கள், ஆனால் அதிமுக இன்றும் ஆலமரமாக நிற்கிறது. சமீபகாலமாக ஒரு சிறிய சம்பவம் நடந்தால் கூடத் தலைவர் விஜய் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகிறார். ஒரு அரசியல் தலைவருக்குத் துணிச்சலும், மக்களோடு மக்களாகக் களத்தில் நிற்கும் குணமும் அவசியம். நாட்டில் என்ன நடக்கிறது, எந்தக் கட்சி எதனுடன் கூட்டணி வைத்திருக்கிறது என்பது கூடத் தெரியாமல் ஒரு கட்சித் தலைவராக இருப்பது வியப்பாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications