ஜாக்குவார் காரில் வந்து நோட்டம்..சென்னை ஈசிஆரில் சுற்றிய வடமாநில திருடர்கள்.. தட்டி தூக்கிய போலீசார்
சென்னை நீலாங்கரையில் ஜாக்குவார் காரில் வந்து நோட்டமிட்டு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் காலணிகளை திருடிய வடமாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: உத்தரபிரதேசத்தில் இருந்து ரூபாய் 80 ஆயிரத்துக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு ஜாக்குவார் காரில் சென்னைக்கு வந்து ஆயிரம் ரூபாய் மற்றும் காலணிகளை திருடிச்சென்ற வட மாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் கொள்ளையர்கள் இங்கு கொள்ளை அடித்து விட்டு செல்லும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
அண்மையில் கூட திருவண்ணாமலையில் தொடர்ந்து 4 ஏ.டி.எம்களில் கொள்ளையடித்த வழக்கில் அரியானவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1000 ரூபாய் திருடி மாட்டிக்கொண்டனர்
இங்கு குற்ற செயல்களை அரங்கேற்றிவிட்டு சொந்த மாநிலத்தில் சென்று சொகுசு வாழ்க்கை வாழவும் போலீசில் எளிதில் சிக்காமல் தப்பி விடலாம் என்ற எண்ணத்துடன் வட மாநிலங்களில் இருந்து கொள்ளையர்கள் அதிகம் சென்னை உள்ளிட்ட நகரங்களை குறிவைக்கின்றனர். இந்த நிலையில்தான், உத்தரபிரதேசத்தில் இருந்து சென்னைக்கு பல லட்சம் மதிப்பு மிக்க ஜாகுவார் சொகுசு காரில் வந்து சென்னையில் பெரும் பணக்காரர்கள் அதிகம் வசிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் கொள்ளையடிக்க நோட்டம் இட்டு வந்துள்ளனர். ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் ரூ.1,000 மற்றும் இரண்டு ஜோடி செருப்புகளைக் கொள்ளையடித்த நிலையில் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-

உத்தரபிரதேச கொள்ளையர்கள்..
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் இர்பான். கொள்ளைக்கூட்ட தலைவன். இவர் மீது நாடு முழுவதும் பல்வேறு கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன. பல இடங்களில் கொள்ளையடித்துவிட்டு இவரது மனைவியிடம் தான் பொருள்களை கொடுப்பார். பஞ்சாயத்து தலைவியான இவரது மனைவி கணவன் கொள்ளையடித்த பொருள்களை அந்த ஊர் கிராம மக்களிடமும், பள்ளி குழந்தைகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்த கொடுப்பதற்கும் போன்ற பிற உதவிகளுக்காக வழங்கி விடுவாராம்.

ரூபாய் 80 ஆயிரத்துக்கு எரிபொருள்
இந்த நிலையில், இர்பானுக்கு அங்குள்ள பிரபல தொழில் அதிபர் ஜாக்குவார் காரை கொடுத்துள்ளார். தன்னிடம் இருந்தால் மாதத்தவணை செலுத்தாத காரணத்தினால் காரை பறிமுதல் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் காரை இர்பானிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஜாக்குவார் காரை வைத்துக்கொண்டு இர்பான் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். ரூபாய் 80 ஆயிரத்துக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு சென்னை வந்துள்ளார். அவருடன் சுனில் குமார், புனித் குமார், ராஜேஷ் குமார் ஆகியோருடன் வந்துள்ளார். இங்கு சென்னையில் ரிச்சான பகுதியை பார்த்து அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஈசிஆர் ரோட்டில் நோட்டம்
அதன்படி ஈசிஆர் நீலாங்கரை ஏரியாவை தேர்வு செய்த கொள்ளையர்கள், அங்கு ஜாக்குவார் காரில் சென்றபடியே நோட்டமிட்டு வந்துள்ளனர். எந்த வீடுகளில் சுலபமாக கொள்ளையடிக்க முடியும் என்ற எண்ணத்தில் அந்த ஏரியாவை ஜாக்குவார் காரில் வந்தபடியே சுற்றியுள்ளனர். அப்போது ஒரு வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் கொத்தாக கொள்ளையடித்துவிடலாம் என்று எண்ணியுள்ளனர். ஆனால் அவர்களால் ஆயிரம் ரூபாய் மற்றும் அங்குள்ள காலணிகளை மட்டுமே கொள்ளையடிக்க முடிந்துள்ளது.

2 பேர் கைது
எனினும் இதன் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த வீட்டின் காவலாளி போலீசிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். எனினும் போலீசார் ஜாக்குவார் காரின் நம்பரை வைத்து அவர்கள் உத்தரபிரதேசம் தப்பி சென்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் உத்தர பிரதேசம் சென்று ராஜேஷ் குமார், புனித் குமாரை கைது செய்தனர். இர்பான் மற்றும் சுனில் குமாரை தேடி வருகின்றனர். ஜாக்குவார் காரில் ரூ. 80 ஆயிரத்துக்கு எரிபொருள் நிரப்பி விட்டு உத்தர பிரதேசத்தில் இருந்து சென்னை வந்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications