இந்தி எங்கே.. ஏன் இவ்வளவு தமிழ்?.. வடஇந்தியர்களிடம் வறுபடும் தி பேமிலி மேன் 2.. வலுக்கும் எதிர்ப்பு!
சென்னை: தமிழர்களிடையே கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் தி பேமிலி மேன் 2 தொடர் தற்போது வடஇந்தியர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
2019ல் அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட் அடித்த சீரிஸ்தான் தி பேமிலி மேன். மனோஜ் பாஜ்பாயி, சந்தீப் கிஷன், பிரியாமணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து, பெரிய அளவில் இந்த சீரிஸ் வைரலானது. ராஜ் நிதிமோரு, கிருஷ்ணா டிகே ஆகியோர் இந்த தொடரை இயக்கி இருந்தனர்.
மனோஜ் பாஜ்பாயி இதில் என்ஐஏ அதிகாரியாக நடித்து இருப்பார். இந்த நிலையில் இந்த தொடரின் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

ஈழம்
ஈழ போராட்டத்தை மையமாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. ஈழ போராளிகள் இந்திய பிரதமரை கொல்ல திட்டமிடுவதாக களம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து செயல்படும் ஈழ பெண் பாத்திரத்தில் சமந்தா ராஜி என்ற பெயரில் நடித்துள்ளார். இந்த தொடர் இந்த கதைக்களம் காரணமாக தமிழர்கள் இடையே கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

எதிர்ப்பு
முக்கிய ஈழ போராட்டத்தை தவறாக சித்தரிப்பதாகவும், எல்டிடிஇ பிரபாகரனை தவறாக காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. அதோடு ஈழ போராளிகளுக்கு ஐஎஸ் தொடர்பு இருப்பதாகவும் முற்றிலும் தவறாக பின்னணியுடன் கதை எழுதப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழர்கள் ஒரு பக்கம் இந்த தொடரை எதிர்க்கும் நிலையில் வடஇந்தியர்களும் இந்த தொடரை எதிர்த்து வருகிறார்கள்.

ஏன்
இந்த தொடரின் 70% கதை சென்னையில் நடக்கிறது. அதேபோல் 70% பேர் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் நடித்துள்ளனர். தேவதர்ஷினி, சமந்தா, பிரியாமணி, மைம் கோபி, ஆனந்த் சாமி, அழகம் பெருமாள் என்று தமிழ்நாடு நடிகர்கள் பலர் இதில் நடித்துள்ளனர். இவர்கள் எல்லோரும் முழுக்க தொடரில் தமிழில்தான் பேசி உள்ளனர். இயல்பாக, உண்மையாக இருக்க வேண்டும் எல்லோரும் தமிழில் பேசி உள்ளனர்.

மலையாளம்
இந்த சீஸனின் முதல் பாகத்தில் பலர் மலையாளத்தில் பேசியது போல இப்போது பலர் தமிழில் பேசி உள்ளனர். இந்த நிலையில் வடஇந்தியர்கள், இந்த தொடரில் இந்தி புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக கூறி உள்ளனர். தமிழ் மொழியில்தான் அதிகம் பேசுகிறார்க்ரல். இந்தியை காணோம். இந்தியை புறக்கணித்துவிட்டார்கள் என்று வடஇந்தியர்கள் பலர் கோபம் அடைந்துள்ளனர்.

கோபம்
நாங்கள் தமிழ் சீரிஸ் பார்த்தது போல இருந்தது. இது இந்தி சீரிஸ் போல இல்லை. சப்டைட்டில் பார்த்து பார்த்து சீரிஸ் பார்க்க கஷ்டமாக இருக்கிறது. ஏன் தமிழில் இவ்வளவு வசனங்கள் என்று பல வடஇந்தியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த தொடர் தமிழ்நாட்டில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
அதிலும் வேதாரண்யம் போன்ற இடங்களில் கதை நடப்பதாகவும் சித்தரித்துள்ளனர். அங்கெல்லாம் எப்படி இந்தியில் மக்கள் பேசுவார்கள் என்ற குறைந்தபட்ச விழிப்புணர்வு கூட இல்லாமல் ஏன் இந்தி இல்லை என்று பலர் கொதித்துள்ளனர். தமிழகத்தில் இந்தி தெரிந்த நபர்கள் மிக மிக குறைவு என்பது தெரியாமல் பல வடஇந்தியர்கள் இப்படி விமர்சனம் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications