கமல்ஹாசன் விவகாரத்தில் விஜயின் கள்ள மெளனம்.. கர்நாடகாவில் ஜனநாயகன் படம் ஓடாது.. நாதக அட்டாக்!
சென்னை: கர்நாடகாவில் ஜனநாயகன் படம் ஓடாது என்ற காரணத்திற்காகவே கமல்ஹாசனுக்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குரல் கொடுக்கவில்லை என்று நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமை பிரச்சனைகளில் விஜய் ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்று கூறிய அவர், தனது கடைசி படமே அவருக்கு முக்கியம் என்று கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக தக் லைஃப் விவகாரம் தமிழ்நாட்டில் பேசுபொருளாக இருந்தது. தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தன. அதேபோல் அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு அளித்தன.

பாஜக மட்டுமே கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விமர்சித்தது. ஒரு கட்டத்தில் தக் லைஃப் படத்தை திட்டமிட்டபடி ஜூன் 5ஆம் தேதி கமல்ஹாசனால் ரிலீஸாகவில்லை. நீதிமன்றம் வரை சென்றும், கர்நாடகாவில் எதிர்ப்புகள் குறையவில்லை. ஆனாலும் கமல்ஹாசன் கடைசி வரை மன்னிப்பு கேட்க முடியாது என்பதில் தெளிவாக இருந்தார்.
இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் குறைந்தபட்சம் தங்களின் கருத்தை கூறினாலும், தமிழக வெற்றிக் கழகம் மட்டும் அமைதி காத்தது. திரைத்துறையின் சீனியரான கமல்ஹாசனுக்கு கூட விஜய் ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இதுகுறித்து நாம் கட்சியின் முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில், கர்நாடகாவில் ஜனநாயகன் படம் ஓடாது என்ற ஒற்றை காரணத்திற்காகவே கமல்ஹாசனுக்காக குரல் கொடுக்காமல் கள்ள மெளனம் சாதிக்கிறார் விஜய். அதனால் தான் தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமை சிக்கல்களில் முதன்மையான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு நதிநீர் சிக்கல்களையும் அவர் இதுவரை பேசவில்லை.
ஆக, தமிழக பிரச்சனையை விட விஜய்க்கு அவரின் கடைசி படமே முக்கியம். இதுதான் விஜயின் அரசியல் லட்சணம். விஜய்க்கு கூட்டம் வருவதால் மட்டுமே மக்களின் ஆதரவு அவருக்கு இருக்கு என்று அர்த்தம் அல்ல. ஏனென்றால் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் ஜிபி முத்து, டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோருக்கு கூட ஆதரவு இருக்கும். அதனால் விஜய் வாக்கு சதவிகிதத்தை தீர்மானிப்பது தேர்தல் தான் என்றும் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications