வங்கக் கடலில் ‘மிதிலி’ சென்னை, கடலூர் உள்பட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை: வங்கக் கடலில் 'மிதிலி’ புயல் உருவாகியுள்ள நிலையில், சென்னை, கடலூர் உள்பட 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கியது. வழக்கமாக அக்டோபர் முதல் வாரத்திலேயே வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால் நடப்பு ஆண்டு அக்டோபர் 20 - ஆம் தேதிக்கு பிறகு தொடங்கியது. பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி காற்றழுத்தம் உருவானது.

இதைத் தொடர்ந்து இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்த நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடலில் இன்று புயல் உருவாகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியுள்ளது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுவிழந்து வரும் 18-ஆம் தேதி வங்கதேசத்தில் மோங்லா- கோபுபரா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாலத்தீவின் பரிந்துரைப்படி புயலுக்கு மிதிலி என பெயர் சூட்டபட்டுள்ளது. இந்த புயலால் இன்று காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 12 மணி நேரத்திற்கு மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திற்கு வீசி வருகிறது. இந்த புயல், ஒடிசா மாநிலம் பாராதீப்பில் இருந்து 200 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
புயல் காரணமாக தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், வடமேற்கு- வடகிழக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகள், ஒடிசா கடலோரம், மேற்கு வங்கம், வங்கதேச கடலோரம், இலங்கை கடலோரம் மற்றும் அதனை ஒட்டியதென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரம் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 2 ஆம் எண் கூண்டு, புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையின் பொருள் என்னவென்றால், புயல் உருவாகியிருப்பதால் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதாகும்.












Click it and Unblock the Notifications