அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகமும் செய்ய தயார்.. எடப்பாடிக்கு ஓபிஎஸ் அழைப்பு!
சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு தூது விட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவினர் ஒன்றிணைய ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
நடைபெற்ற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அரசியல் மாற்றங்களை சந்தித்து வந்தாலும், பாஜக உடனான கூட்டணியை முறித்தது மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்பட்டது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.

தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ உடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தது அதிமுக. அதிமுக நேரடியாக 33 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய 2 கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே களம் கண்டன. தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட்டது. மொத்தம் 20 தொகுதிகளில் திமுகவுடன் அதிமுக நேரடியாக மோதியது.
அதிமுக படுதோல்வி: 6 இடங்களில் காங்கிரஸையும், விசிக, சிபிஐ, சிபிஎம்-ஐ தலா 2 இடங்களிலும், மதிமுக, ஐயூஎம்எல்-ஐ தலா ஒரு இடங்களிலும் எதிர்கொண்டது. ஆனால் அனைத்து இடங்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை மதுரை, தென் சென்னை, வேலூர், நெல்லை, நீலகிரி, கோவை ஆகிய 6 தொகுதிகளில் பாஜக மூன்றாம் இடத்துக்கு தள்ளியது.
அதே போல் தருமபுரியில் பாமக 2ஆம் இடத்தை பிடித்ததால் அதிமுக 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதே போல், ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வமும், தேனியில் போட்டியிட்ட டிடிவி தினகரனும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2ஆம் இடம் பிடித்தனர். அதிமுகவை, கன்னியாகுமரி, புதுச்சேரியில் நான்காம் இடத்திற்கு தள்ளியது நாம் தமிழர் கட்சி.
மேலும், தென்சென்னை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, வேலூர், ராமநாதபுரம் ஆகிய 7 மக்களவைத் தொகுதிகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை கூட பெறாததால் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். கடந்த 2019 தேர்தலில் 1 தொகுதியில் அதிமுக வென்ற நிலையில், தற்போது ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஓபிஎஸ், தினகரனிடம் தோற்ற அதிமுக: அதேசமயம், ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு அதிமுக 3வது இடம் பிடித்துள்ளது. தேனியில் போட்டியிட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 2வது இடம் பிடித்தார். அங்கும் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
தொடர்ச்சியாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அதிமுக ஒன்றிணைவை வலியுறுத்தி குரல்கள் வலுவடைந்துள்ளன. அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட சசிகலா, கேசி பழனிசாமி, புகழேந்தி ஆகியோர், அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனக் குரல் கொடுத்தனர்.
ஓபிஎஸ் அறைகூவல்: இந்நிலையில், முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றிணைய வேண்டும், கட்சியை மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் தயாராகுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.
ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல். ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம், கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியம்.
"தாய்வழி வந்த தங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நாமதே" என்னும் எம்ஜிஆர் மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திவிட்டுப் போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்" எனக் கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
சசிகலா அழைப்பு: "ஊரு ரெண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற கதையாக எங்கள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு திமுக அதில் குளிர் காய்ந்து பெற்ற வெற்றியாகத்தான் இதை பார்க்க முடிகிறது. இந்த இயக்கம் எந்நாளும் தோல்வி அடைந்துவிடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் நான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தேன்.

அதிமுகவை ஒருங்கிணைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்கமுடியாது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்து, இன்றைக்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சில இடங்களில் நான்காவது இடத்திற்கும், மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
இதுபோன்ற தொடர் தோல்விகளை இயக்கம் எந்த நேரத்திலும் கண்டதில்லை. தனி ஆவர்த்தனம் செய்து கொண்டு இருந்தால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. கட்சியை ஒருங்கிணைக்க அனைவரும் வர வேண்டும். நாம் ஒற்றுமையுடன் இருந்தால் யாராலும் நம்மை வீழ்த்திவிட முடியாது." என நேற்று அறைகூவல் விடுத்திருந்தார் சசிகலா.
அதிமுக படுதோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் வலுவடைந்துள்ளன. கட்சியை ஒற்றுமையாக மீட்டெடுக்க எந்த தியாகத்தையும் செய்ய தயார் எனக் கூறியுள்ளார் ஓபிஎஸ். ஓபிஎஸ், சசிகலாவின் அழைப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா? அதிமுக தலைவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது போகப்போக தெரியும்.












Click it and Unblock the Notifications