தீர்ப்பால் பின்னடைவு.. ‘அடுத்த மூவ்’க்கு ரெடியான ஓபிஎஸ்.. நடக்காது.. தொண்டர்களை வைத்து மெகா பிளான்!
சென்னை : பொதுக்குழு நடத்தும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியிருப்பதால் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு தயாராகி வருகிறது ஓபிஎஸ் தரப்பு.
பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டாலும், பொதுச் செயலாளர் தொடர்பான விதியில் எந்தவொரு திருத்தமும் கொண்டு வர முடியாத வகையில் குடைச்சல் கொடுக்க ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
எம்ஜிஆர் வகுத்த விதிகளில் திருத்தம் ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதால், அதற்கு தடை பெறும் நடவடிக்கைகளை தொடங்கவிருக்கிறது ஓபிஎஸ் தரப்பு.

அதிமுக மோதல்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தொடங்கிய இந்த ஒற்றைத் தலைமை பிரச்சனை தினமும் வெவ்வேறு ரூபங்களில் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து ஓபிஎஸ்ஸை கடுமையாகச் சாடி வருகின்றனர். இதனால் அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினருக்கு இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன.

பொதுக்குழு
ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றதால் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வர முடியவில்லை. வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு. உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஈபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதில் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது, ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒருமித்த கருத்து என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஐகோர்ட்டில்
அதேசமயம், ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் 15 நாட்களுக்கு முன்பாக அனைத்து நிர்வாகிகளுக்கும் முறையாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான எனக்கு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற உள்ளதாக கடந்த 4ஆம் தேதிதான் அழைப்பு கிடைத்துள்ளது. எனவே உரிய கட்சி விதிமுறைகளை பின்பற்றாமல் நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரிக்கப்படவுள்ளது.

பொதுச் செயலாளர் ஈபிஎஸ்
இதற்கிடையே எப்படியும் ஒற்றைத் தலைமை தீர்மானத்தைக் கொண்டு வந்து இந்த பொதுக்குழுவிலேயே இடைக்கால பொதுச் செயலாளர் ஆகிவிட வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்கான திருத்த விதிகளையும், தீர்மானங்களையும் தயார் செய்து விட்டது ஈபிஎஸ் தரப்பு. பொதுக்குழுவிற்கு தடை விதிக்கப்படாது என பெரும் நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு.

உச்சநீதிமன்ற தீர்ப்பு
இந்நிலையில், சற்று முன்பு உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான விசாரணைக்கு வந்த நிலையில், ஜூலை 11-ஆம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நாங்கள் எப்படி தலையிட முடியும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பொதுக்குழுவை எப்படி நடத்த வேண்டும் என நீதிமன்றம் வழிகாட்ட முடியாது எனத் தெரிவித்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் ஆலோசனை
இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பு ஈபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்துள்ளதால் பொதுக்குழுக் கூட்டம் எடப்பாடி தரப்பு திட்டமிட்டபடி நடைபெற்றால் அடுத்த நகர்வாக என்ன செய்வது என்பது பற்றி ஓபிஎஸ் தரப்பினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றாலும், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் ஆகவிடமால் தடுப்பதற்கு என்ன சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களோடும், சட்ட வல்லுநர்களுடனும் தீவிரமாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

தொண்டர்கள்தான்
அதிமுகவின் பொதுச் செயலாளரை கட்சியின் தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எம்ஜிஆர் வகுத்த விதி. அதிமுக சட்ட விதிகளின்படி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, அந்தமான் ஆகிய இடங்களில் உள்ள அதிமுக தொண்டர்கள் வாக்கெடுப்பு நடத்தித் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த விதிகளில் மாற்றம் கொண்டு வந்து பொதுக்குழு உறுப்பினர்களே பொதுச் செயலாளரை தேர்வு செய்யலாம் என ஈபிஎஸ் தரப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக களமிறங்க ஓபிஎஸ் தரப்பு ஆலோசித்து வருகிறது.
Recommended Video

ஓபிஎஸ் அடுத்தகட்ட நகர்வு
அதிமுகவில் தலைமை தொடர்பான சிக்கல் வரும்போது 80 சதவீத ஆதரவுள்ள பொது உறுப்பினர்கள்தான் தலைமைக்கு வர வேண்டும் என அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் உயிலில் எழுதி வைத்துள்ளார். தலைமையை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என எம்ஜிஆர் எழுதிய உயில் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமனிடம் உள்ளது. அதன்படி, தலைமை பொறுப்புக்கு யார் வர வேண்டும் என்பதை தொண்டர்களே முடிவு செய்ய வேண்டும் என நீதிமன்றத்தை அணுக இருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications