நேரில் வரக்கூட மனசு இல்லை.. இரண்டு முறையும்.. எட்டிக்கூட பார்க்காத ஓபிஎஸ்.. இப்போ எங்கே போனார்?
சென்னை: அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் சார்பாக நிறுத்தப்பட்டு இருந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் வாங்கப்பட்டு உள்ளார்.
ஓ பன்னீர்செல்வம் தரப்பின் இந்த முடிவு அவர்களுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் பொதுக்குழுவில் போதுமான உறுப்பினர்கள் ஆதரவு இல்லாத காரணத்தால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெறலாம்.

உத்தரவு
வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை உடனே கூட்ட முடியாத பட்சத்தில் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆலோசனையை பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இடைக்கால உத்தரவு போட்டது. அதிமுகவில் தான் சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளரை ஏற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த கோரிக்கையில் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது நேரடியாக எடப்பாடிக்கு ஆதரவான தீர்ப்பாக இல்லை என்றாலும் மறைமுகமாக அவருக்கே ஆதரவாக முடிகிறது. இதனால் எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு பொதுக்குழுவில் எத்தனை வாக்குகள், ஓ பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்திலுக்கு எத்தனை பொதுக்குழுவில் வாக்குகள் என்பதுதான் இறுதியில் முக்கியத்துவம் பெறும்.

ஆதரவு
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். தற்போது பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக வேட்பாளரை தேர்வு செய்ய வாக்களிக்கப்பட்ட வாக்கு சீட்டுகளை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளார். இன்று இரவிற்குள் அதிமுகவின் பொது வேட்பாளர் இறுதி செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் எடப்பாடி தரப்பிற்கு அதிக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால், தென்னரசுதான் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

புகார்
கடந்த இரண்டு நாட்களாக இதற்கான பார்ம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது. ஓ பன்னீர்செல்வத்திற்கும் இந்த பார்ம் அனுப்பப்பட்டு இருந்தது . இதில் அதிமுக வேட்பாளராக கே. எஸ் தென்னரசுவை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அவரின் பெயரை டிக் அடிக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஓ பன்னீர்செல்வம் வேட்பாளர் செந்தில் பெயர் இடம்பெறவில்லை. வெறுமனே தென்னரசு பெயர் இல்லாத பட்சத்தில் இருக்கின்ற பாக்சில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெயர்களை தேர்வு செய்ய முடியும். பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெயர்களை அதில் குறிப்பிட முடியும். இந்த நிலையில் தமிழ் மகன் இதில் நடுநிலையாக செயல்படவில்லை. அவர் எடப்பாடி ஆள் போல செயல்பட்டு இருக்கிறார். ஒரு வேட்பாளர் பெயரை மட்டும் போடுவது தவறு. அவர் நடந்து கொண்ட விதமே தவறுதான். அதனால் இதை தேர்தல் ஆணையத்தில் முறையிட போகிறோம் என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

வாபஸ்
இந்த நிலையில்தான் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் சார்பாக நிறுத்தப்பட்டு இருந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் வாங்கப்பட்டு உள்ளார். பொதுக்குழுவில் வாபஸ் இருக்காது என்பதால் அதற்கு முன்பாக ஓபிஎஸ் தரப்பு வாபஸ் வாங்கி உள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பிற்கு கூட வரவில்லை. ஓபிஎஸ் தரப்பு நிர்வாகி கு.ப.கிருஷ்ணன்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இப்படி முக்கியமான அறிவிப்புகளை வெளியிட ஓபிஎஸ் வராமல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாவது முறையாக அவர் இப்படி செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து இருக்கிறார்.

பொது வேட்பாளர்
நேற்று முதல்நாள் கூட பொதுவேட்பாளரை, அதாவது இரட்டை இலை சின்னத்தின் கீழ் நிற்கும் வேட்பளாரை ஏற்றுக்கொள்வோம் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தது. இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று தெரிவித்தது. அந்த அறிக்கையை ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டு இருந்தார். ஆனால் அந்த அறிக்கையை கூட படிக்க கூட ஓ பன்னீர்செல்வம் நேரில் வரவில்லை. செய்தியாளர் சந்திப்பில் வைத்திலிங்கம்தான் அந்த அறிக்கையை படித்தார். அந்த அளவிற்கு ஓ பன்னீர்செல்வம் இந்த உத்தரவால் மனம் உடைந்து போய் இருக்கிறாராம். அதனால்தான் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications