பூசாரியா? சாமியா? முந்திக் கொண்ட எடப்பாடி! ’டெல்லி’ கதவைத் தட்டும் ஓபிஎஸ்! தூதாகப் பறக்கும் ‘வாரிசு’
சென்னை : தமிழகத்தில் அதிமுக தொடர்பான விவாதங்கள் பரபரப்பை கிளப்பி இருக்கும் நிலையில் டெல்லியில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். இந்த நிலையில் தங்கள் தரப்புக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியையும் அமித்ஷாவையும் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக முயன்று வரும் நிலையில் அவரது மகன் ரவீந்திரநாத் பாஜக மேலிட தலைகளிடம் தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இதனால் கடும் அதிர்ச்சியை சந்தித்துள்ள நிலையில் கட்சியில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டி மாறி மாறி நீதிமன்றங்களை நாடி வருகிறார்.

அதிகார மோதல்
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது என ஒரு நீதிபதி அமர்வு தீர்ப்பளித்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு உற்சாகம் அடைந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்ய அந்த தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்ததால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உற்சாகமடைந்தனர். இருந்தும் விடாத ஓ.பன்னீர்செல்வம் இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

பாஜக ஆதரவு
இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நடந்த பிரிவு உபசரிப்பு விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியையும் அமித்ஷாவையும் சந்திக்க நேரம் கிடைக்காததால் ஏமாற்றத்தோடு பயணத்தை பாதியிலே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். அப்போது ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பாஜக தலைமை இபிஎஸ்ஐ கண்டு கொள்ளவில்லை எனவும் கூறப்பட்டது.

அமித் ஷாவிடம் பேச்சு
இந்த நிலையில் தான் அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்மானங்கள் பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதை அடுத்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணைய விவகாரத்தோடு பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுவார் எனக் கூறப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதில் அதிமுகவில் நிலவி வரும் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பேசியதாகவும் தன்னிடம் இருக்கும் தொண்டர்கள் நிர்வாகிகள் செல்வாக்கு எம்எல்ஏக்கள் பலம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கூறிய எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் ஓபிஎஸ்ஐ இருந்து நிரந்தரமாக விலக்கி வைத்தாலும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அமித்ஷாவிடம் அரசியலே பேசவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியதும் குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ்ஸின் ஆசை
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் தங்கள் தரப்புக்கு தான் சாதகமாக தீர்ப்பு வரும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். மேலும் டெல்லி மேலிடத்தின் செல்வாக்கும் தங்களுக்கே இருப்பதால் தேர்தல் ஆணையத்திலும் சுமூகமான முடிவு கிடைக்கும் எனவும் இதனால் அதிமுகவில் மீண்டும் அதிகார மையமாக தன்னால் வலம் வர முடியும் என நம்புகிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் டெல்லி பயணம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை கலக்கத்தை ஆழ்த்தி உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.

ஓபிஎஸ் - வாரிசு முயற்சி
அதிமுகவைப் பொறுத்தவரை டெல்லி மேலிடம் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்திருப்பது அவருக்கு ஒரு வகையான வெற்றி எனவும் ஆனால் அவர்கள் ஆதரவு தருவார்களா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் தான் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. காசியில் இருந்தபடியே டெல்லியில் முக்கிய தலைவர்களை தொடர்பு கொண்டு பிரதமர் மற்றும் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டதாக கூறப்படும் நிலையில் அதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தந்தையுடன் பயணம் மேற்கொண்டு இருக்கும் தேனி நாடாளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத் தனக்குத் தெரிந்த பாஜக தலைவர்களிடம் பிரதமர் மற்றும் அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு சில நாட்களில் அதற்கான பதில் கிடைக்கும் என கூறப்படும் நிலையில் தங்கள் தரப்பு வாதங்களையும் எடுத்து வைக்க ஓபிஎஸ் தரப்பு தயாராகி வருகிறது.












Click it and Unblock the Notifications