‘வெல்லம்’ போல் வந்த அறிவிப்பு! அதிமுக புதிய தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம்! அதிரடி காட்டும் ஓபிஎஸ்!
சென்னை : எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு வரும் ஓ பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட நான்கு பேர் தலைமை கழக நிர்வாகிகளாக நியமிக்கப்படுவதாக அதிரடி அறிக்கையினை வெளியிட்டுள்ளார்
கடந்த ஜுலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை நீக்குவதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் அதிமுகவின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ், அவரது மகன்கள் ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப், அவரது ஆதவாளர்கள் என அடுத்தடுத்து நீக்கப்பட்டனர்.

அதிமுக மோதல்
மேலும் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடியிடம் ஓபிஎஸ் ஆதரவு பட்டியல் அளிக்கப்பட்ட நிலையில், முதலில் 18 பேரும், அடுத்ததாக 21 பேரும் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கம்
இப்படி இரு தரப்பும் மாறி மாறி கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். தொடர்ந்து 14 மாவட்ட செயலாளர்கள் நியமனம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் என அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறார்.

அறிக்கைப் போர்
நேற்று அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததோடு, துணை ஒருங்கிணைப்பாளர்களாக. கு.ப.கிருஷ்ணன், ஜே சிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்படுவதாக ஒபிஎஸ் இன்றும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நியமனம்
அதில், அதிமுக அமைப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளராக ஆர்.டி.ராமச்சந்திரன், கழக வழக்கறிஞர் பிரிவு தலைவராக திருமாறன், கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளராக ஆர்.வி.பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications