நம்ப வைத்து கழுத்தறுத்து..பழிவாங்கிய பாஜக! ஏக கோபத்தில் ஓபிஎஸ்! அதிமுகவை வீழ்த்த ப்ளான்-பி ரெடியாமே!
சென்னை: அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியால் வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், பாஜகவில் தஞ்சம் புகுந்தார். ஆனால் தான் எதிர்பார்த்தது எதுவும் நடக்காததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் இருக்கும் எனவும், அதை நோக்கிய அவரது திட்டங்கள் இருக்கிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
தமிழ்நாடு முதலமைச்சராக மூன்று முறை பதவி ஏற்றவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவர். 1996க்கு பிறகு ஜெயலலிதா சில காரணங்களால் சிறை செல்ல நேர்ந்த போது தனக்கு அடுத்த இடத்தில் ஓ பன்னீர்செல்வத்தை வைத்திருந்தார். செங்கோட்டையன், தனபால் உள்ளிட்ட பல சீனியர்கள் இருந்தாலும், ஓ.பன்னீர்செல்வத்தை தான் முதலமைச்சராக ஆக்கினார்.
அதற்கேற்றார் போல் ஜெயலலிதா சிறையில் இருந்து வெளிவந்த போதெல்லாம் பதவியை எந்தவித மனக்கசப்புமின்றி உடனடியாக விட்டுக் கொடுத்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் மீது ஜெயலலிதாவுக்கு எப்போதுமே நம்பிக்கை அதிகம். இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை பரிதாபகரமானது. சசிகலாவின் நெருக்கடியால் பதவியை ராஜினாமா செய்த அவர் தொடர்ந்து தர்மயுத்தம் நடத்தினார்.

அப்போதே கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். சசிகலா. சிறை செல்ல நேர்ந்த போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனார். அவர் முதல்வராக தொடர டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவோடு ஆட்சியை நிறைவு செய்தார் எடப்பாடி. அதற்குப் பிறகு ஒற்றைத் தலைமை விவகாரத்தை முன்வைத்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து வெளியேற்றினார் எடப்பாடி பழனிச்சாமி. பல ஆண்டுகளாக விசுவாசமாக இருந்த தன்னை கட்சியை விட்டு நீக்கியதால் மிகுந்த அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் பாஜக தரப்பில் தஞ்சம் புகுந்தார்.
அதிமுக பாஜக கூட்டணி சேர்வதும் உடைவதுமாக இருந்த நிலையில் நிரந்தரமாகவே பாஜகவோடு ஓபிஎஸ் இணைந்து விட்டார் என்றே கூறப்பட்டது. தற்போது 2026 தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் ஓபிஎஸ்ஐ பாஜக கழற்றிவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க கூட ஓபிஎஸ்-க்கு அனுமதி மறுக்கப்பட்டது. நயினார் நாகேந்திரனை தான் அழைத்தும் அவர் கண்டுகொள்ளவில்லை என பகிரங்கமாக குற்றச்சாட்டை வைத்தார் ஓபிஎஸ். அதே நேரத்தில் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்றது.
ஓபிஎஸ் விரும்பினால் பிரதமரை சந்திக்க வைக்கிறேன் என நயினார் கூறினார். ஆனால் தான் அனுப்பிய குறுஞ்செய்திகளை காட்டி தமிழக பாஜக தன்னை ஏமாற்றி விட்டது என்றார் ஓபிஎஸ். இதற்கிடையே முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஓபிஎஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவுடன் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி அமைக்க போகிறார், அன்வர் ராஜாவை போல திமுகவில் இணையப் போகிறார் என்றெல்லாம் யூகங்கள் இறக்கை கட்டி பறந்தன.
ஆனால் திமுக கூட்டணியில் இணைவேன் என வதந்தி பரப்பப்படுவதாக கூறியிருக்கிறார் ஓபிஎஸ். அதே நேரத்தில் ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அவரது ஆதரவாளர்களிடம் பேசிய போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர். "அதிமுகவையும் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிய பாஜகவையும் பழி வாங்குவதுதான் தற்போதைக்கு ஓபிஎஸ் எண்ணம். இதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார். திமுகவோடு கூட்டணி அமைத்தாலும் அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும் அதிமுக பாஜக கூட்டணியை தமிழகத்தில் வெல்ல வைக்கக்கூடாது என்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணம்.
பிற கட்சிகளுடன் நிச்சயம் கூட்டணி அமைக்கும் போது தென் மாவட்டங்களில் அதிமுக பாஜக கூட்டணிக்கு நெருக்கடி தர முடியும். இதனால் அதிமுக வாக்குகள் பிரிந்து திமுக தலைமை தான் வெற்றி பெறும். எப்படி பார்த்தாலும் ஓபிஎஸ்-ன் கணக்கு தப்பாது. திமுகவுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, தனித்து நின்றால் கூட ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வாக்குகளை நிச்சயம் தங்கள் அணியால் வெல்ல முடியும். அதற்கேற்ற நிர்வாகிகள் பலம் தங்களுக்கு இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை அதிமுக பாஜக கூட்டணியை வீழ்த்துவதுதான் ஓபிஎஸ் எண்ணம். அதை நோக்கியே அவரது பயணமும் இருக்கும்" என்கின்றனர்.












Click it and Unblock the Notifications