தெளிவா கணக்கு போட்ட ஓபிஎஸ்.. 'டெல்லி சோர்ஸ்’.. ஆங்க்ரி மோடுக்கு பின்னணி இதானா? திமுக மீதும் அட்டாக்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தின் போக்கில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அவரது அடுத்தகட்ட அரசியலை வெளிப்படுத்துகிறது, தீர்மானமாக சில கணக்குகளைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
பாஜகவின் கூட்டணி கணக்குகள் எப்படி இருந்தாலும் தமக்கு அதில் நிச்சயம் இடம் உண்டு என உறுதியான தகவல் கிடைத்திருப்பதாலேயே, கவலையே இல்லாமல் ஈபிஎஸ்ஸை விளாசத் தொடங்கி இருக்கிறாராம்.
எடப்பாடி பழனிசாமியையும் நேரடியாகவே அட்டாக் செய்யத் தொடங்கியுள்ளார். அதேநேரம், திமுகவை மென்மையான விமர்சனத்தோடு அணுகிவந்த ஓபிஎஸ், தற்போது கொஞ்சம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார்.
தனக்கு பாஜக ஆதரவு சர்வ நிச்சயம் என்பதை உணர்ந்து கொண்டதாலேயே ஓபிஎஸ் அதிரடி ஆக்ஷனில் இறங்கி இருப்பதாகவும், அதன் காரணமாகவே திமுக தயவை எதிர்பார்க்காமல் கடுமையாக திமுக அரசை விளாசி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் பாய்ச்சல்
முன்பு எடப்பாடி பழனிசாமிதான் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையான வார்த்தைகளால் சாடிப் பேசி வந்தார். அதற்கு எதிர்வினையாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை வறுத்தெடுத்து வந்தாலும் கூட, ஓபிஎஸ் நேரடியாக ஈபிஎஸ் மீது கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கவில்லை. தனது ஆதரவாளர்களிடமும், ஈபிஎஸ்ஸை ஒருமையில் எல்லாம் பேசாதீர்கள் என்று அறிவுரை கூறி வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ் மீது பாய்ச்சலைத் தொடங்கினார். ஊர்ந்து வந்தது யார்? துரோகி யார்? என்றெல்லாம் ஈபிஎஸ் மீது டைரக்ட் அட்டாக்கைச் செய்தார் ஓபிஎஸ்.

துரோகி - அதிரடி டோன்
அதற்குக் காரணம், எடப்பாடி தரப்பு தன்னை துரோகி என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதற்கு ஓபிஎஸ் பதில் எதுவும் சொல்லாமல் இருப்பது அவரது தரப்பை பலம் இழக்கச் செய்வதாக ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமான சிலர் அட்வைஸ் கூறியுள்ளனர். எடப்பாடியை விமர்சிக்க பல காரணங்கள் இருந்தும் நீங்கள் அமைதி காப்பது அவர்களின் கை ஓங்கவே உதவும், இன்றைய யூடியூப் காலத்தில் நீங்கள் டீசண்டாக பேசுகிறீர்கள் என்பதற்கெல்லாம் யாரும் ஆதரவு தர மாட்டார்கள் என்றெல்லாம் பளிச்சென சொல்லியுள்ளனர்.

ஆங்க்ரி மோட்
இதையடுத்தே ஓ.பன்னீர்செல்வமும் தனது சைலண்ட் மோடை ஆங்க்ரி மோடுக்கு மாற்றி, எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றெல்லாம் பேசினார். சசிகலாவுக்கு ஈபிஎஸ் துரோகம் செய்ததாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விமர்சித்தாலும், ஓபிஎஸ் இப்போதுதான் அதனை தீவிரமாக கையில் எடுத்திருக்கிறார். எடப்பாடி போலவே அக்ரெசிவ் அட்டாக்கில் இறங்கலாம் என ஓபிஎஸ் முடிவெடுத்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஈபிஎஸ் தொடர்ந்து முரண்டு பிடிக்கும் நிலையில் நாம் காம்ப்ரமைஸ் பேசிக் கொண்டிருந்தால் எடுபடாது என்பதை ஓபிஎஸ் உணர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

பாஜக கைவிடாது
இதனால் அடுத்தகட்ட முடிவுக்கு வந்திருக்கிறாராம் ஓபிஎஸ். பாஜக தன்னை ஒருபோதும் கைவிடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமியோடு தான் இணைந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி தன்னை பாஜக கைவிடாது என்ற நம்பிக்கையில் இருக்கிறார். டெல்லியில் இருந்து ஓபிஎஸ்ஸுக்கு இருந்து வரும் தகவல்களும் அதையே உறுதி செய்வதால் எடப்பாடி பழனிசாமியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக நமது பேச்சு இனி வெளிப்படக்கூடாது என முடிவெடுத்து இருக்கிறாராம்.

டெல்லி மைனஸ் எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி பாஜகவின் பேச்சைக் கேட்காததால், டெல்லி தலைமை அவர் மீது அப்செட்டில் இருப்பதையும், தான் பாஜகவுக்கு இணக்கமாகச் செயல்படுவதால் தனக்கு டெல்லியில் நல்ல அபிமானம் இருப்பதையும் டெல்லிக்கு நெருக்கமான புள்ளிகள் மூலம் உறுதி செய்துள்ள ஓபிஎஸ், எடப்பாடியை நம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை, பாஜகவை முழுமையாக நம்பலாம் என்ற நிலைக்கு வந்திருக்கிறாராம். எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணிக்கு ஒத்துவரவில்லை என்றாலும் நமக்கு பாதகமில்லை என ஓபிஎஸ் கணக்கு போட்டிருக்கிறாராம்.

கணக்கு
2024 லோக்சபா தேர்தலில் நிச்சயம் கணிசமான இடங்களை பாஜக வெல்வதற்கு கணக்குப் போடும், பாஜகவுடன் நின்றால் நமக்கும் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக பாதிப்பு இருக்காது, ஈபிஎஸ் உடன் பாஜகவே தன்னை இணைத்து வைத்தாலும் சரி, தனி அணியாக இருந்தாலும் சரி, சிக்கல் இல்லை என நினைக்கிறாராம். மேலும், தென் மாவட்டங்களில் பாஜக சில தொகுதிகளில் குறி வைத்துள்ளது. அந்தக் கணக்கு காரணமாகவும் பாஜக தன்னை கைவிடுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற புள்ளிக்கு ஓபிஎஸ் வந்திருக்கிறாராம்.

அட்டாக்
அதனால் தான் ஓப்பனாகவே, எடப்பாடி பழனிசாமி ஊழல் குறித்தெல்லாம் தனது ஆதரவாளர்களை ஓபிஎஸ் பேச வைத்தாராம். சமீபத்தில் கூட ஓபிஎஸ்ஸே, நான் ரகசியங்களை வெளியிட்டால் ஈபிஎஸ் தாங்க மாட்டார் என்றெல்லாம் கொளுத்திப் போட்டார். இப்படியான அதிரடி அட்டாக்குகள் மூலமும், பாஜகவின் கவனத்தை இன்னும் கூடுதலாகப் பெறலாம் என்பதே ஓபிஎஸ் போட்டிருக்கும் கணக்காம். அதாவது பாஜகவின் கைக்குள் ஈபிஎஸ்ஸை கொண்டு வர இப்படியான அட்டாக்குகள் மூலம் ஓபிஎஸ் உதவி செய்கிறாராம்.

திமுக? பாஜக?
மேலும், சமீபமாக திமுக அரசையும் பெரும்பாலான விவகாரங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார் ஓபிஎஸ். ஆளுநர் விவகாரத்தில் திமுக நடவடிக்கையை விளாசியது தொடங்கி, பல விஷயங்களில் திமுக அரசுக்கு எதிராக, எடப்பாடிக்கு முன்பே கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் ஓபிஎஸ். பாஜக, திமுக என இரண்டு கட்சிக்கும் சாதகமாக பேசி வருவது செட்டாகாது, நமக்கு அரசியலில் கைகொடுக்கப்போவது பாஜக தான் என்பதை உணர்ந்தே, திமுக கையை விட்டுவிட்டு வலுவாக பாஜகவின் கையைப் பற்றி இருப்பதாகச் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications