காலில் விழுகிறோம்.. தயவுசெய்து எங்களை சேர்த்துக்கோங்க.. எடப்பாடியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்த கோரிக்கை
காஞ்சிபுரம்: காலில்கூட விழுவதற்குத் தயாராக இருக்கிறோம், எங்களை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் கேட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஓபிஎஸ் அணியை இணைத்துக் கொள்ளாவிட்டால், மீண்டும் தமிழ்நாட்டில் மூன்றெழுத்து கட்சியே ஆட்சி அமைக்கும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் ரஞ்சித் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன் 2 வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன. அதில் முதல் வாய்ப்பாக எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அதிமுகவில் இணைவது, 2வது வாய்ப்பு தனிக்கட்சி தொடங்கி பாஜக மூலமாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி இணைவது என்பது தான். கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேட்சையாக ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு 2வது இடத்தை பிடித்தார்.

இதன் மூலமாக முக்குலத்தோர் சமூக வாக்குகளும் பாஜகவுக்கு அதிகளவில் கிடைத்தன. தென் மாவட்டங்களில் பாஜக வளர்வதற்கு ஓபிஎஸ் முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்து, ஓபிஎஸ் அமைதி காத்து வருகிறார். பாஜக தலைவர்களும் ஓபிஎஸை கண்டுகொள்ளாததால், நேரடியாக அதிமுகவில் இணைய விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுவரை சம்மதிக்கவில்லை. ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை சேர்ப்பதால், மீண்டும் அதிமுகவில் அவரின் தலைமை கேள்விக்குறி ஆக்கப்படுமோ என்ற ஐயம் இருந்து வருகிறது. ஆனால் தென் மாவட்டங்களில் அதிமுக குறிப்பிடத்தக்கத் தொகுதிகளில் வெல்ல வேண்டுமென்றால், ஓபிஎஸ் கட்சியில் இருக்க வேண்டும். இதனை அதிமுகவினரும் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர், எடப்பாடி பழனிசாமியிடம் காலில்கூட விழுகிறோம் என்ற பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் ரஞ்சித் குமார் பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் நாங்கள் போராடிவிட்டோம். அனைவரையும் சந்தித்துவிட்டோம்.
ஓபிஎஸ் அணியை அதிமுகவில் இணைத்துக் கொள்ளவில்லை என்றால், மீண்டும் அந்த மூன்றெழுத்து கட்சியே ஆட்சி அமைக்கும். உங்கள் காலிலேயே வந்து விழுந்துவிடுகிறோம். சேர்த்துக் கொள்ளுங்கள்.. என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே செப்டம்பர் மாதத்தில் ஓபிஎஸ் தரப்பு மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறது. அப்போது ஓபிஎஸ் தன்னுடைய பலத்தை நிரூபிக்கத் தயாராகி வருகிறார்.
இதனிடையே ஓபிஎஸ் ஆதரவாளர் எடப்பாடி பழனிசாமியின் காலில் கூட விழத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் விரைவில் எம்ஜிஆர் மாளிகையில் "அன்பு மலர்களே", "கண்கள் பனித்தன, இதயம் இனித்தது" என்ற வார்த்தைகள் ஒலிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பின், அதில் உள் ஒதுக்கீடாக அமமுகவுக்கு ஒதுக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை பற்றிப் பேசுவதைத் தவிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications