சட்டசபைக் குழுவை மாற்றி அமைக்க வரும் மனுக்கள்.. நிராகரியுங்கள்.. சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில் சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: அதிமுக சட்டசபைக் குழுவை மாற்றி அமைக்கும்படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, கே.சி. முனுசாமி ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதாக கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.

பொதுக்குழுவால் நீக்க முடியாது
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம், அதிமுகவில் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை தொண்டர்களால் ஒற்றை வாக்கு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர்களின் பதவி 5 ஆண்டுகாலப் பதவி. அதை பொதுக்குழுவால் நீக்க முடியாது. நேற்று நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது.

தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பன்னீர்செல்வத்தை கட்டுப்படுத்தாது. அதை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும், தற்பொழுதும் பன்னீர்செல்வம் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் , பொருளாளராக இருக்கின்றார் என்றும் கூறி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் ஓபிஎஸ். ஜெயலலிதாவுக்குப் பிறகு பொதுச் செயலாளர் பதவியே கிடையாது என்பதால் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

துரோகம்
தன்னை முதலமைச்சர் ஆகிய சசிகலா அம்மாவுக்கு துரோகம் செய்ததைப் போன்று நான்காண்டு காலம் தனக்கு உறுதுணையாக இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் கட்சி அலுவலகம் சென்றபோது எடப்பாடி ஆதரவாளர்கள் கல், கம்புகளை வீசினர். ரவுடிகளை 5 நாளாக அங்கு தங்க வைத்திருந்து அட்டூழியம் செய்தனர். எனவே, எங்களை குறை சொல்ல அவர்களுக்குத் தகுதியில்லை என்று கூறியுள்ளார் வைத்திலிங்கம்.

பொருளாளர் நான்தான்
அதிமுக கணக்கு வைத்துள்ள கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "இந்திய தேர்தல் ஆணைய சட்டத்தின் படி இன்று வரை நான்தான் ஒருங்கிணைப்பாளர், நான்தான் பொருளாளர். நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் போது என்னைக் கேட்காமல் எந்தவித வரவு செலவு கணக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், தன்னை கேட்காமல் வரவு செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகருக்குக் ஓபிஎஸ் கடிதம்
இதனிடையே சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில் தமிழக சட்டசபை சபாநாயகருக்கு ஓ. பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும்படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று எழுதியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். போஸ்டர் யுத்தத்தில் ஆரம்பித்த ஒற்றைத்தலைமை விவகாரம் இப்போது கடிதப்போராக நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications