நிதியமைச்சரா இருந்த உங்களுக்கு.. சொத்து விவரம் நினைவில்லையா! வழக்கறிஞர் கேள்வியால் ஓபிஎஸ் டென்ஷன்
சென்னை: நவாஸ் கனி வெற்றிக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று அவரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓபிஎஸிடம் பல்வேறு கேள்விகள் கேடப்பட்ட நிலையில், அவர் சில கேள்விகளுக்குத் தெரியாது எனப் பதிலளித்தார்.. இதைக் கேட்ட நவாஸ் கனி தரப்பு, நிதியமைச்சராக இருந்த உங்களுக்கே சொத்து விவரம் நினைவில்லையா என்று வழக்கறிஞர் சித்ரா சம்பத் கேட்டார்.
ராமநாதபுரத்தில் நவாஸ் கனி வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் ஓ பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. 2024 லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் சுயேச்சையாகப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவர் 2வது இடம் பிடித்தார். திமுக கூட்டணியில் ஐயுஎம்எல் கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ் கனி அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

வழக்கு
இருப்பினும், நவாஸ் கனி வெற்றிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான விசாரணை அங்கு நடந்து வருகிறது. இன்றைய தினம் ஓபிஎஸிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது நிதியமைச்சராக இருந்தவருக்குத் தனது சொத்து விவரம் நினைவில்லையா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது..
இந்த வழக்கில் 35 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்றைய தினம் நீதிபதி சிவி காசி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தார். அவரிடம் நவாஸ் கனி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்திரா சம்பத் பல்வேறு கேள்விகள் எழுப்பினார். குறிப்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்த தொழில்கள் மூலம் கிடைத்த வருவாய் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
விவசாயம்
அதற்குப் பதிலளித்த ஓபிஎஸ், பால் பண்ணை வைத்திருந்ததாகவும் அதில் 40 மாடுகள் மூலம் வருமானம் கிடைப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், அந்த வருவாய் குடும்ப செலவுக்காகப் பயன்படுத்துவதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார். மாடு வளர்ப்பு, விவசாயம் மட்டுமல்லாமல் பல தொழில்கள் செய்து வந்ததாகவும் ஓபிஎஸ் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சொத்து விவரம்
அப்போது ஓபிஎஸ் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்த நிலங்கள் தொடர்பாகச் சில கேள்விகளை நவால் கனி தரப்பு வழக்கறிஞர் எழுப்பி இருந்தார். அதற்கு ஓபிஸ், "எனக்கு நினைவில்லை" என்று பதிலளித்தார். அதற்கு ஓபிஎஸ் தரப்பு, "ஒரு மாநில நிதியமைச்சராக நீங்கள் இருந்திருக்கிறீர்கள். முதல்வராகவும் இருந்துள்ளீர்கள். உங்களுக்குச் சொத்து விவரம் நினைவில்லையா" என்று வழக்கறிஞர் சித்ரா சம்பத் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து ஓபிஎஸ், "இந்த விஷயங்கள் எனது ஆடிட்டருக்கு மட்டுமே தெரியும்" என்றும் தெரிவித்தார். தொடர்ந்து நவாஸ் கனி தரப்பு வழக்கறிஞர், பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இருப்பினும், அதில் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் சிரமமடைந்த ஓபிஎஸ், சற்று கொஞ்சம் கோபமாகவே சில கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
கடுப்பான ஓபிஎஸ்
ஒரு கட்டத்தில், "இந்த வழக்கைத் தொடர்ந்ததே நான் தான். என்னிடமே இத்தனை கேள்விகளைக் கேட்கிறீர்கள். இதில் நவாஸ் எதிராகத்தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனக்கு எதிரான வழக்கு இல்லை" என ஓபிஎஸ் கூறினார். இருப்பினும், தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
மேலும் பஞ்சமி நிலம் வாங்கியது தொடர்பாகவும் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஓ பன்னீர்செல்வம், பஞ்சமி நிலம் என்று தெரிந்த பிறகு அவற்றை ஒப்படைத்து விட்டதாகத் தெரிவித்தார். குறுக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இன்று விசாரணை நிறைவடையாததால் வழக்கை ஜனவரி 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications