அடுத்தவரின் மனைவியை திருமணம் செய்து வைக்கக் கோரி இளைஞர் ரகளை! காவல் நிலையத்தில் சுவாரஸ்யம்
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் திருமணமான பெண் மீது ஒருதலை காதல் கொண்ட இளைஞர், காவல் நிலையம் சென்று, அந்த பெண்ணை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி சூளைமேட்டில் தனது கணவருக்கு வசித்து வருகிறார். அந்த வீட்டின் மாடியில் bachelor தமிழ்ச் செல்வன் (30) என்பவர் வசித்து வந்தார்.

இந்த நிலையில் மேலே துணி உலர்த்த செல்லும் போது, மளிகை பொருட்களை உலர்த்த செல்லும் போது தமிழ்ச் செல்வனுடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் நண்பர்களாக பழகினராம்.
இந்த நிலையில் அந்த பெண் அக்கறையுடன் பேசுவதை பார்த்த தமிழ்ச் செல்வனுக்கு அவர் மீது ஒருதலை காதல் ஏற்பட்டதாம். இந்த விஷயத்தை அந்த பெண்ணிடமே அவர் தெரிவித்திருந்தாராம். அதாவது "உனக்கு திருமணமானால் என்ன, கணவரை விட்டுவிட்டு என்னுடன் வந்துவிடு. நீயும் நானும் சேர்ந்து வாழலாம்" என அந்த பெண்ணிடம் தமிழ்ச் செல்வன் சொன்னதாக தெரிகிறது.
இதை கேட்ட அந்த பெண் அதிர்ச்சி அடைந்து " நீங்கள் பேசுவது மிகவும் தவறு. எனக்கு திருமணமாகிவிட்டது. நீங்களும் உன் பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழுங்கள்" என சொன்னாராம்.
அதிலிருந்து அந்த நபருடன் பேசுவதையே அந்த பெண் நிறுத்திவிட்டாராம். இதனால் தமிழ்ச் செல்வனுக்கு ஆத்திரம் வந்தது. இவராகவே போய் பேச முயன்றாலும், அந்த பெண் பேசாமல் தன் வீட்டில் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாராம்.
ஒரு முறை இதே போல் அந்த பெண்ணிடம் , தனது காதலை மீண்டும் தெரிவித்துள்ளார். அப்போதும் அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் மேலும் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன், "என் காதலை ஏற்க மாட்டாயா, என்னுடன் ஏன் பேச மறுக்கிறாய்" என கேட்டு அந்த பெண்ணுடன் தகராறு செய்ததுடன் அவரை சரமாரியாக தமிழ் செல்வன் தாக்கியதால் சொல்லப்படுகிறது.
இதையடுத்து அந்த பெண், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டுஅரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் , தமிழ்ச் செல்வனை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது ஒருதலை காதலை அந்த இளைஞர் தெரிவித்தார்.
அப்போது போலீஸார், "நீ திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. அடுத்தவரின் மனைவி மீது ஆசைப்படக் கூடாது. உன்னால் அந்த பெண்ணின் குடும்ப வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே அவரை விட்டு ஒதுங்கிவிடு" என்றார்களாம்.
ஆனால் இதை ஏற்க தமிழ்ச்செல்வன் மறுத்துள்ளார். "அந்த பெண்ணை என்னால் மறக்கவே முடியாது. அவருக்கு திருமணம் ஆனது குறித்து எனக்கு கவலையில்லை. அந்த பெண் இல்லாமல் என்னால் வாழவே முடியாது. அந்த பெண்ணை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்" என கூறி காவல் நிலையத்திலும் அவர் ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து போலீஸார், இளம்பெண்ணை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்து தமிழ்ச் செல்வனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications