மகாலிங்கம் திருடியிருப்பார்.. எங்கள் மீது திருட்டுப்பழி - ஈபிஎஸ் தரப்பு புகாருக்கு புகழேந்தி பதிலடி!
சென்னை : ஏற்கனவே தலைமை அலுவலகத்தில் இருந்த பொருட்களை திருடிவிட்டு, இந்த சம்பவத்தால் எங்கள் மீது பழி போடுகிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த வெள்ளி செங்கோல் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை ஓபிஎஸ் தரப்பினர் திருடிச் சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசியுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் தான் திருடியிருப்பார் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

அலுவலகத்திற்கு சீல்
ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் சென்றபோது, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் கடும் சேதங்கள் ஏற்பட்டன. கல்வீச்சில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அதிமுக அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தார்.

சாவி ஈபிஎஸ் வசம்
இந்த சீலை அகற்றி அலுவலகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து, அலுவலக சாவி, தலைமைக் கழக மேலாளரும், ஈபிஎஸ் ஆதரவாளருமான மகாலிங்கத்திடம் நேற்று முன் தினம் ஒப்படைக்கப்பட்டது.

அறைகளுக்குள் சென்று
சீல் அகற்றப்பட்டு, சாவி ஒப்படைக்கப்பட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் அலுவலகத்திற்குள் சென்று ஒவ்வொரு அறையாகப் பார்வையிட்டனர். அலுவலகத்தின் அறைக் கதவுகள் உடைக்கப்பட்டு, அவற்றிலிருந்த ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கணினிகளின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்களும் காணவில்லை என அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு
அலுவலகத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், "அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை காணவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு காலகட்டங்களில் நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட செங்கோல், வெள்ளி வேல் ஆகியவற்றையும் திருடிச் சென்றுள்ளனர் போய் உள்ளன. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஓபிஎஸ் தரப்பு பதில்
இந்நிலையில், ஈபிஎஸ் தரப்பினரின் குற்றச்சாட்டுகளை ஓபிஎஸ் தரப்பினர் மறுத்து வருகின்றனர். இதுதொடர்பாக ஒன் இந்தியா தளத்துக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, "ஒரு மாதத்திற்கு முன்பு ஏதோ ஒரு இதழில் படித்தேன். அதிமுக தலைமைக் கழகத்தில் இருக்கும் மகாலிங்கம் உள்ளிட்டோர் தான் இந்த வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் எனக் கூறியிருந்தார்கள். ஏற்கனவே அங்கு இருந்த விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் திருடியிருப்பார்கள்.

கெட்ட பெயர் ஏற்படுத்த
இப்படி ஒரு நிகழ்வு நடந்ததைக் காரணமாக வைத்து, எங்கள் மீது பழி போடலாம் எனத் திட்டமிட்டு இந்த சதி குற்றச்சாட்டை சொல்கிறார்கள். கீழ் தளத்தில் தான் களேபரங்கள் நடந்தன. மேல் தளத்திற்கு யாரும் போனதாகத் தெரியவில்லை. அங்கும் பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் சொல்வது சுத்தப்பொய். எங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

200 அடியாட்கள்
200 அடியாட்கள், ஓ.பன்னீர்செல்வத்தை அடிக்க கூட்டமாக சேர்களை தூக்கிக்கொண்டு ஓடி வந்தார்கள். அந்தக் காட்சிகள் எல்லாம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதா என்று தெரியவில்லை. எனவே, நீதிமன்றத்தின் குளறுபடியான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். உச்ச நீதிமன்றத்தில் அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்து எங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெறுவோம்.

கட்சியில் ஏன் திருட வேண்டும்
அதிமுக தலைமை அலுவலகம் முழுவதும் மகாலிங்கம் கண்ட்ரோல் தான். ஒருகாலத்தில் ஜெயலலிதாவுக்கு டீ, காபி வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்த ஆள். இன்று அவர் வளர்ந்து, எல்லா அமைச்சர்களையும் அதிகாரம் செய்யும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், அவர் ஏன் அதிமுக அலுவலகத்தில் இருந்த பொருட்களை எடுத்து வரவேண்டும்?

திருட்டுப் பழி
எடப்பாடி பழனிசாமி தரப்பு சுமத்தும் திருட்டுப்பழியை தொண்டர்கள் நம்பமாட்டார்கள். திருடர்களும், அயோக்கியர்களும் இன்னொருவர் மீது திருட்டுப் பழி சுமத்தினால் அதை எப்படி மற்றவர்கள் நம்புவார்கள்? மகாலிங்கம் ஒரு கிரிமினல், அவர் மீது வழக்கு இருக்கிறது. அவர் சொல்வது எங்கும் எடுபடாது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications