இனியும் அநாகரிகமாக பேசினால் ஜெயக்குமார் குழந்தையுடன் தான் பிரஸ்மீட் நடக்கும்.. புகழேந்தி எச்சரிக்கை!
சென்னை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இனியும் ஓபிஎஸ் பற்றி அநாகரிகமாக பேசினால் அவரது குழந்தையுடன் தான் அடுத்த பிரஸ்மீட்டில் பேச வேண்டிய நிலை ஏற்படும் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான புகழேந்தி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஓபிஎஸ் மீதான ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்தார்.
ஜெயக்குமாரிடம் எத்தனை முறை பதவியை பறித்தார் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயக்குமார் ஒருகாலத்தில் ஓபிஎஸ் காலை பிடித்து மேலே வந்தவர் என விமர்சித்துள்ளார் புகழேந்தி.

என்ன மிச்சம் இருக்கு?
செய்தியாளர்களைச் சந்தித்து புகழேந்தி பேசுகையில், "அதிமுக தலைமை அலுவலகம் எங்களுக்கு எல்லாம் கோவில் என்று ஜெயக்குமார் சொல்கிறார். அதை காலால் உதைத்து உடைத்ததாக சொல்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும் இடம் கோவில் என்றால், அதை ஏன் பூட்டி வைத்தீர்கள்? கிராமப் பகுதிகளில் கோவிலை பூட்டி வைத்தால் என்ன நடக்கும்? உதைதான் கிடைக்கும். தலைமைக்கழகம் எனது வீடு என்று ஓபிஎஸ் சொல்கிறார். அங்கு திருடுவதற்கு என்ன மிச்சம் வைத்திருக்கிறீர்கள். எல்லாவற்றையும் கொள்ளையடித்து முடித்துவிட்டீர்களே.

ஊழல் பணம்
ஜெயக்குமாருக்கு, சென்னையில் தாஜ்மஹால் பேலஸ் மாதிரி வீடு உள்ளது. எப்படி இவ்வளவு பெரிய வீடு கட்ட முடியும். உங்கள் அப்பா என்ன நீங்கள் பிறக்கும்போதே கோடீஸ்வரரா? அமைச்சராக இருந்தபோது கொள்ளை அடித்த பணம்தான். எல்லோரும் கொள்ளையடியுங்கள் என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏன் வாய்மூடி இருந்தார்? ரூ4,800 கோடி ஊழல் என்று எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு உள்ளது. ஜெயக்குமார் மீது திமுக பிரமுகரை அரை நிர்வாணப்படுத்தியது, ஊழல் வழக்கு ஆகியவை உள்ளன.

உதயகுமார் மீது ஏன் நடவடிக்கை இல்லை?
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேனியில் போய், ஓபிஎஸ் வீட்டை சூறையாடுவேன் என்றார். இதுபற்றி புகார் அளித்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. அதே நேரம் உதயகுமாரை செல்போனில் ஒருவர் திட்டியதாக, தென்காசி இளைஞர் பாசறை மாவட்ட செயலாளரை வீட்டிலேயே போய் போலீஸ் கைது செய்துள்ளது. ஓபிஎஸ் வீட்டை சூறையாடுவோம் என்றபோது ஏன் போலீஸ் இப்படி கைது செய்யவில்லை?

காலைப் பிடித்து மேலே வந்தவர்
எடப்பாடி பழனிசாமி பேசும்போது, முதல்வரையே தவறான வார்த்தைகளை சொல்லி பேசுகிறார். இதுபற்றி சேலம் எஸ்.பியிடம் புகார் கொடுத்தேன். இதுவரை நடவடிக்கை இல்லை. ஜெயலலிதா இருக்கும் வரை எடப்பாடி பழனிசாமி யார் என்றே மக்களுக்கு தெரியாது. இப்போது பணம் வந்ததால்தான் இவ்வளவு பிரச்சனையும். ஜெயலலிதா இருக்கும்போது ஒரு குறை கூட ஓபிஎஸ் மீது சொன்னது இல்லை. ஜெயக்குமாரிடம் எத்தனை முறை பதவியை பறித்தார் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயக்குமார் ஒருகாலத்தில் ஓபிஎஸ் காலை பிடித்து மேலே வந்தவர். இனி காலை பிடித்து மேலே வரவே முடியாது.

மேலும் பல எம்.எல்.ஏக்கள்
ஓபிஎஸ் காலில் விழுந்துதான் தலைமை கழகத்துக்கு அவரைக் எடப்பாடி ஆதரவாளர்கள் கூட்டி வந்தனர் என்பதை ஜெயக்குமார் மறந்துவிடக்கூடாது. உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் போன்று, மேலும் பல எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் வர உள்ளனர். அதைப் பொறுக்க முடியாமல் ஜெயக்குமார் வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் அதிமுகவை நடத்த முடியாது.

ஜெயக்குமாருக்கு எச்சரிக்கை
ஓபிஎஸ் மீது எந்த குற்றச்சாட்டு இருந்தாலும் ஜெயக்குமார் பேட்டி மூலம் தெரியப்படுத்தலாம். ஆனால், அவர் பற்றி அநாகரிகமாக பேச வேண்டாம். ஜெயக்குமாருக்கு எச்சரிக்க விரும்புகிறேன். இனியும் ஓபிஎஸ் பற்றி நீங்கள் அநாகரிகமாக பேசினால் உங்களுடைய குழந்தையுடன் அடுத்த பிரஸ்மீட்டில் பேச வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படும். இதை ஜெயக்குமாருக்கு எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications