தனிமைப்படுத்தப்பட்ட ஓபிஎஸ்.. அமமுகவை வைத்து எடப்பாடி பழனிசாமி ஆடிய ஆட்டம்.. ஒரு முடிவால் மாறிய கேம்!
சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறுவதாக அறிவிப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடிவே காரணமாக அமைந்திருக்கிறது. பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், அமமுகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், ஓபிஎஸ் தரப்பை ஏற்க சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
2026 சட்டசபைத் தேர்தலையொட்டி அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக, அமமுக மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டணியாக இணைந்து போட்டியிட்டனர். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த போது, அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பும் பாஜக கூட்டணியில் தாங்கள் தொடர்வதாகவே தெரிவித்தனர்.

அதிலும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற நாங்கள் பிரச்சாரம் செய்வேன் என்றும் அறிவித்தார். ஆனால் அமமுக மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டணியில் இருக்கிறார்களா என்பது குறித்து அதிமுக தரப்பில் யாரும் வாய் திறக்கவே இல்லை. இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்புக்கு பாஜக தரப்பில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
சென்னை மற்றும் மதுரை வந்த போதும் அமித்ஷா ஓபிஎஸ் தரப்பை சந்திக்கவில்லை. அதேபோல் தூத்துக்குடி வந்த போது மோடியை சந்திக்கவும் ஓபிஎஸ்க்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு பாஜக உடனான உறவு முறிந்துவிட்டதாக அறிவித்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், தற்போது எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றும் கூறி இருக்கிறது.
ஓபிஎஸ் தரப்பு இந்த முடிவை எடுக்க எடப்பாடி பழனிசாமியே மறைமுக காரணமாக அமைந்திருக்கிறார். ஏனென்றால் சில வாரங்களுக்கு முன்பாக ஓபிஎஸ் தரப்பு செப்.4ல் மதுரையில் மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்தது. அதன்பின் எடப்பாடி பழனிசாமியிடம் அமமுக கூட்டணியில் சேர்க்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, காலம் பதில் சொல்லும் என்று தெரிவித்தார்.
ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் காலில் கூட விழுவதற்குத் தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தது தொடர்பான கேள்விக்கு, காலம் கடந்த ஒன்றாகும் என்று தெரிவித்தார். இதன் மூலமாக அமமுக கடைசி நேரத்தில் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைத்துக் கொள்ளப்படும் என்று பார்க்கப்பட்டது. இதனை பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி தெளிவாகக் கூறி இருக்கிறார்.
இதன் காரணமாகவே அமமுகவுடன் தொடர்ச்சியாக பாஜக நெருக்கம் காட்டி வருகிறது. இதுதான் ஓபிஎஸ் தரப்பை பாஜக கைவிடக் காரணமாகவும் அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டங்களில் நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரனை வைத்து ஈடு செய்யலாம் என்று எடப்பாடி கணக்குப் போட்டிருக்கிறார்.
அதேபோல் முக்குலத்தோர் சமூகத்தின் ஒரு பிரிவை மட்டும் எடப்பாடி பழனிசாமி அரவணைப்பதன் மூலமாக வாக்குகள் பெரியளவில் சிதற வாய்ப்புகள் குறைவு. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகள் கட்டாயம் தேவை என்ற நிலையில், அதில் பெரும்பாலான தொகுதிகளை பாஜக மற்றும் டிடிவி தினகரனிடம் கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications