சாதி மத பேதமில்லாம ஒன்னா இருப்போம்.. நல்ல வார்த்தையுடன் பக்ரித் பண்டிகை வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்
சென்னை: தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் சாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட உறுதி பூணுவோம் என தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அரிக்கையில், "தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைத் தூதரின் தியாகங்களை நினைத்துப் பார்த்து அவருடைய வழியை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதுதான் பக்ரீத் திருநாள்.

இறைத் தூதரின் தியாகங்களை நினைவுகூருவதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கும், நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் தடைக் கற்களாக விளங்குகின்ற ஆணவம், அநீதி, துரோகம், சூழ்ச்சி ஆகியவை ஒழிந்து நல்ல எண்ணங்களும், மனித நேயமும் தழைத்தோங்கும். தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் சாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட உறுதி பூணுவோம்.
இறை நம்பிக்கையும், மனித நேயமும் பரவட்டும்; அமைதி நிலவட்டும், ஆனந்தம் பெருகட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய "பக்ரீத்" திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்." என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இஸ்லாமியர்களின் 2 பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அரபு மாதமான துல்ஹஜ் மாதத்தில் இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை சென்றிருக்கும் நிலையில், அம்மாதத்தின் 10 வது நாளில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 19 ஆம் தேதி மாலை தமிழ்நாட்டில் துல் ஹஜ் பிறை பார்க்கப்பட்டது.

இதனை அடுத்து ஜூன் 29 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் என்று அறிவிப்பு வெளியானது. இது பற்றி தமிழ்நாடு தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அயூப் வெளியிட்ட அறிவிப்பில், "ஹிஜ்ரி 1444 துல் கஃதா மாதம் 29 ஆம் தேதி திங்கட்கிழமை ஆங்கில மாதம் 19-06-2023 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை நாகூரில் காணப்பட்டது." என்று தெரிவித்தார்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல கோடி மதிப்பில் ஆடுகள், மாடுகள் பலியிடுவதற்காக விற்பனை செய்யப்பட்டன. இவ்வாறு பலியிடப்படும் ஆடு மாடுகளின் இறைச்சிகள் உறவினர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்வது வழக்கம்.












Click it and Unblock the Notifications