முதுகலை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.. 26ம் தேதிக்குள் நடக்க போகும் மாற்றம்
சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை 2024-25-ம் கல்வியாண்டில் ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி நிலவரப்படி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. உபரி என கண்டறியப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை அந்த மாவட்டத்திற்குள் உள்ள நிரப்ப தகுந்த காலிப்பணியிடம், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் மூலம் அனுப்ப முதன்மை கல்வி அலுவலரால் வருகிற 26-ந்தேதிக்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்ட செயல்முறைகளில் கூறுகையில்,"தமிழக பள்ளிக்கல்வித்துறை 2024-25-ம் கல்வியாண்டில் ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி நிலவரப்படி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்தும் விவரங்கள் பெற்று தொகுக்கப்பட்டு உள்ளது.

அந்த விவரங்களின் அடிப்படையில், உபரி என கண்டறியப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை அந்த மாவட்டத்திற்குள் உள்ள நிரப்ப தகுந்த காலிப்பணியிடம், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் மூலம் அனுப்ப முதன்மை கல்வி அலுவலரால் வருகிற 26-ந்தேதிக்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
பணிநிரவல் கலந்தாய்வில், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர், விதவைகள், மனைவியை இழந்தவர்கள், விவாகரத்து பெற்ற ஆசிரியைகள், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். குறிப்பிட்ட பாடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட 2 முதுகலை ஆசிரியர்கள் இருக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக அதே பள்ளியில் அதே பாடத்தில் உள்ள அடுத்த இளையவரை உபரியாக தேர்வு செய்து பணி நிரவலுக்கு உட்படுத்த வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் பணிகளில் மாவட்ட ஆட்சியர்களின் தலையீடு அதிகமாக உள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்தது. தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழுக் கூட்டம் விருதுநகரில் நேற்று நடந்தது. இந்நிகழ்வில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், முதல் நிலை ஆசிரியர்களுக்கு மே மாத விடுமுறையை உறுதி செய்தல், அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களுக்குக் கலந்தாய்வு நடத்தி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் பிரபாகரன் கூறும் போது, "திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தனி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை இந்த பொதுக் குழுவில் முதல் தீர்மானமாக நிறைவேற்றி உள்ளோம்.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும்போது, தலைமை ஆசிரியர் இல்லாமல் எந்தப் பள்ளியும் இருக்கக் கூடாது என்ற நிலையை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம். அதற்கான நடவடிக்கையாக மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.
முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்றும் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் மறுதேர்வு எழுதும் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். முதுகலை ஆசிரியர்களுக்கு மே மாத விடுப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதால் முதுகலை ஆசிரியர்களை அலைக் கழிக்காமல் விடுமுறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு எடுக்கும் முதுகலை ஆசிரியர்களின் பணிகளில் மாவட்ட ஆட்சியர்களின் தலையீடு அதிகமாக உள்ளது என்றும் இதை தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications