வேளச்சேரியில் வெள்ள பெருக்கு.. மேம்பாலத்தின் மீது கார்களை பாதுகாப்பாக நிறுத்திய ஓனர்கள்!
சென்னை: மழை வெள்ளத்திற்கு அஞ்சி கார்களை அதன் உரிமையாளர்கள் வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தியுள்ளனர். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை வேளச்சேரி பிரதான சாலையை ஒட்டிய, ஐந்து பர்லாங்க் சாலை, வேளச்சேரி ராம்நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இரவு முழுவதும் மழை பெய்த காரணத்தினால் தாழ்வான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்து
காலையிலிருந்து மழை பெய்வது தொடர்வதால் சாலையில் தேங்கிய மழை நீர் வடியாமல் அப்படியே நிற்கிறது. இதில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதோடு, வாகனங்கள் செல்ல ஐந்து பர்லாங் சாலையில் தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

கார்கள்
ஆங்காங்கே இடுப்பளவு தண்ணீர் தேங்குவதால் தாழ்வான குடியிருப்புகளில் வசிப்போரின் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மீது நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலையால் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

பாதுகாப்பான இடத்தில்
கடந்த 2015 ஆம் ஆண்டு மழை வெள்ளத்தில் நிறைய கார்கள் பெரும் பாதிப்பை சந்தித்ததால் அதற்கடுத்த ஆண்டுகளின் போது வடகிழக்கு பருவமழை காலத்தின் போது தங்கள் கார்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்துவதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

எப்போது விடிவுகாலம்
தற்போது புயல் சின்னம் ஏதும் உருவாகாத நிலையில் இந்த ஒரு நாள் மழைக்கே இப்படி தண்ணீர் தேங்கி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எப்போது மழை பெய்தாலும் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாகத் திகழும் வேளச்சேரி ராம்நகர் பகுதிக்கு விடிவுக் காலம் எப்போது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்புடன் பருவமழையை எதிர்கொண்டு வருகின்றனர் வேளச்சேரி மக்கள்.












Click it and Unblock the Notifications