பல்லாவரம்-குன்றத்தூர் நான்கு வழிச்சாலை.. 11 ஆண்டு கனவு நிறைவேறுது.. தொடங்கியது சூப்பர் விஷயம்
சென்னை: நிலம் கையகப்படுத்துவதற்கான ஆரம்ப அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு, 6.8 கி.மீ பல்லாவரம்-குன்றத்தூர் நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் வேகம் பெற்றுள்ளது. தாம்பரம் மாநகராட்சி தன்னுடைய பணிகளை முடித்த பிறகு, மாநில நெடுஞ்சாலைத் துறையும், தற்போதுள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
பல்லாவரம் - குன்றத்தூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலை, 13 கி.மீ நீளமுள்ள ஜிஎஸ்டி சாலையை கோடம்பாக்கம் சாலை வழியாக சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையுடன் இணைக்கிறது. சென்னை பைபாஸ், அவுட்டர் ரிங் ரோடு மற்றும் சென்னை உட்புற பகுதிகளை இணைக்கிறது. எனவே, 6.8 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலைப் பகுதியில் ஜிஎஸ்டி முதல் கோடம்பாக்கம் சாலையில் குன்றத்தூர் சந்திப்பு வரை ஒவ்வொரு 1.5 கி.மீ.க்கும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுவது தொடர்கிறது. இந்தப் பிரிவில் ஒரு நாளைக்கு 5,500 பயணிகள் கார்கள் வந்து செல்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

தற்போதைய நிலையில் அனகாபுத்தூர் மற்றும் பல்லாவரம் இடையே 4 கி.மீ தூரம் பயணிக்க சுமார் 35 முதல் 40 நிமிடங்கள் ஆகிறது. இதன் காரணமாக இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த சாலை, பல்லாவரத்தில் தொடஙகி ஸ்ரீபெரும்புதூர் வரை நீண்டு செல்கிறது. குன்றத்தூரில் உள்ள கோடம்பாக்கம் நெடுஞ்சாலைக்கும் ஒரு முக்கிய இணைப்பு சாலையாக இருக்கிறது.
தற்போதைய இருவழிச் சாலை 9 முதல் 10 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கிறது. இந்த சாலையை 4 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்த மாநில நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், திருநாகேஸ்வரம், மஞ்சேரி மற்றும் குன்றத்தூர் ஆகிய ஆறு வருவாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி ஆரம்பம் ஆகி உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் முடிந்ததும் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுபற்றி அனகாபுத்தூரைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், குன்றத்தூர் பல்லாவரம் சாலையில் நாள் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் 3-4 கி.மீ வரை நீள்கிறது. நிலம் கையகப்படுத்துவதில் சிரமங்களை அரசு எதிர்கொண்டு வருகிறது. சாலையோரக் கடைகள் பல அரசியல் சார்புடையவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் நெடுஞ்சாலைதுறை திணறி வருகிறது. உண்மையில் நெடுஞ்சாலைத் துறை 2014 ஆம் ஆண்டிலேயே பணியைத் தொடங்கியிருந்தால், இந்த திட்டம் இந்நேரம் நிறைவடைந்திருக்கும் என்று கூறினார்.
அதேபோல் இன்னொருவர் கூறும் போது, அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு மற்றும் அதிகரித்து வரும் குடியிருப்புகளுக்கே ஏற்ப, இந்தப் பகுதியில் பெரிய உள்கட்டமைப்பு மேம்பாடு எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.. அனகாபுத்தூரில் வசிப்பவர்களும் அரசுப் பேருந்துகளில் பயணிப்பவர்களும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பல்லாவரம் முதல் குன்றத்தூர் வரை செல்லும் பேருந்துகள் மிக மெதுவான வேகத்தில் செல்கின்றன. பீக் அவர்ஸில் செல்ல 70 முதல் 80 நிமிடங்கள் ஆகும் என்கிறார்கள். அண்மையில் இந்த சாலையை ஆய்வு செய்த அமைச்சர் எவ வேலு, பணிகள் நிச்சயம் தொடங்கப்படும் என உறுதி அளித்தார். அதன்படி பணிகள் தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications