பல்லாவரத்தில் சேர்ந்து வாழ மறுத்த மனைவி... ஓட ஓட விரட்டி ஆசிட் வீசி.. குருடாக்கிய கணவன்
சென்னை: சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சனா பாத்திமா என்ற பெண்ணுக்கும் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நான்கு வருடம் திருமண வாழ்க்கை நன்றாகவே போயிருக்கிறது. கடைசி இரண்டு ஆண்டுகள் பிரிந்தே வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் தன்னுடன் சேர்ந்து வாழ வர மறுத்ததால் ஆத்திரமடைந்த முகமது அலி, தனது காதல் மனைவியை ஓட ஓட விரட்டிச் சென்று ஆசிட் வீசி குருடாக்கி உள்ளார்.
கணவன் மனைவி இடையே பிரச்சனை என்றால் பேசித்தான் தீர்க்க வேண்டும். கணவனை வேண்டாம் என்று மனைவியோ, மனைவி வேண்டாம் என கணவனோ பிரிந்து சென்றால் அவர்களுக்குள் பேசி தீர்க்க வேண்டும். தீர்க்க முடியாவிட்டால் சட்ட ரீதியாகவே அடுத்த நகர்வுகளை வைக்க வேண்டும். அதனைவிட்டு விட்டு அவர்கள் யாருக்கும் கிடைக்ககூடாது என்று கேவலமான முடிவெடுப்பது உண்மையில் மிகப்பெரிய கோழைத்தனம். அப்படியான ஒரு சம்பவம் பல்லாவரத்தில் நடந்துள்ளது.

குடும்பத்தகராறு
சென்னை பல்லாவரம் அடுத்த பாரதி நகர் துலுக்காத்தம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த 26 வயதாகும் சனா பாத்திமா என்பவருக்கும், அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதாகும் முகமது அலி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்னர், 4 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தார்கள். ஆனால் குடும்ப தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
வாக்குவாதம்
பல்லாவரம் பகுதியில் உள்ள தாய் வீட்டில் தனது 4 வயது குழந்தையுடன் சனா பாத்திமா வாழ்ந்து வந்திருக்கிறார். எனினும் தன்னுடன் வாழ வருமாறு கூறி மனைவி சனா பாத்திமாவை முகமது அலி அடிக்கடி வற்புறுத்தி வந்தாராம். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி அன்று மாமியார் வீட்டுக்குச் சென்ற முகமது அலி சனா பாத்திமாவிடம் "என்னோடு வாழ வருகிறாயா? இல்லையா?" எனக் கேட்டு வாக்குவாதம் செய்தாராம். ஆனால் மனைவி சனா பாத்திமா வர மறுக்கவே ஆத்திரமடைந்த முகமது அலி தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து மனைவி மீது ஊற்ற முயன்றார்.
திராவகம் வீசினர்
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சனா பாத்திமா அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் விடாமல் சாலையில் ஓட ஓட விரட்டிச் சென்று அவரது முகத்தில் திராவகத்தை வீசியிருக்கிறார். இதில் சனா பாத்திமாவின் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பூந்தமல்லி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிசிடிவி காட்சி
இந்த நிலையில் மனைவியின் மீது கணவர் ஓட ஓட ஆசிட் வீசிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகியது. இதைத்தொடர்ந்து பல்லாவரத்தில் வைத்து பத்திமாவின் கணவர் முகமது அலியை பல்லாவரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications