டெல்லிக்கு பராசக்தி டீம் மட்டும் ஏன்னு கேட்கறீங்களா? விஜய் நடிகராக இருந்திருந்தால்..! தமிழிசை!
சென்னை: பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் பொங்கல் கொண்டாட்ட நிகழ்வில் பராசக்தி திரைப்படக் குழுவினர் கலந்துகொண்டது கட்சிக்குப் புதிய பலம் சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய் இன்னும் திரைத்துறையில் மட்டுமே இருந்திருந்தால், அவரையும் டெல்லிக்கு அழைத்திருப்போம் எனவும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

சென்னையின் சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் விழாவைக் கொண்டாடினார். அப்போது பாஜக மகளிர் அணியினருடன் சேர்ந்து, 'மோடி பொங்கல்', 'என்டிஏ பொங்கல்' போன்ற முழக்கங்களை எழுப்பி உற்சாகமாக நடனமாடினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழல், விஜய்யின் நடவடிக்கைகள் மற்றும் டெல்லி பொங்கல் விழா குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் மோடி நடத்திய டெல்லி பொங்கல் விழாவில் பராசக்தி படக் குழுவினர் கலந்து கொண்டதைப் பாராட்டிய தமிழிசை, பராசக்தி திரைப்படம் காங்கிரஸின் உண்மை முகத்தைக் காட்டியிருப்பதால் அவர்களின் வருகை பாஜகவுக்கு மேலும் வலு சேர்க்கிறது என்றார்.
நடிகர் விஜய் குறித்து அவர் பேசுகையில், "விஜய் இன்னும் நடிகராகவே இருந்திருந்தால் அவரையும் டெல்லியில் நடந்த பொங்கல் விழாவுக்கு அழைத்திருப்போம்" என்று குறிப்பிட்டார்.
மேலும், "அவரது ரசிகர்கள் 'ஜனநாயகன் திரைப்படம் வெளியானால்தான் எங்களுக்குப் பொங்கல்' எனக் கூறுகிறார்கள். எனவே, அவர்களோடு சேர்ந்து நாமும் பொங்கலைக் கொண்டாடுவோம்" எனத் தெரிவித்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும், விஜய்யின் அரசியல் நகர்வு குறித்த மறைமுகக் குறிப்பையும் அவர் வெளிப்படுத்தினார்.
தமிழக அரசு தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்துள்ளதை கடுமையாகச் சாடிய தமிழிசை, சித்திரை ஒன்றுதான் உண்மையான தமிழ்ப் புத்தாண்டு என திட்டவட்டமாகத் தெரிவித்தார். விஜய் யாரோ ஒருவரால் தவறாக வழி நடத்தப்பட்டதாகவும், தேர்தல் காரணங்களுக்காகத் தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டு எனச் சொல்லியிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் எழுப்பினார்.
திரிபுராவில் அமித்ஷா திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தது, சில தரப்பினருக்குச் சிக்கலாகத் தெரிவதாக தமிழிசை சௌந்தரராஜன் சுட்டிக் காட்டினார். "திருவள்ளுவரை பாஜக தன்வசம் எடுத்துவிட்டதே என்பதுதான் திமுகவின் உண்மையான பயம்" என்று அவர் விமர்சித்தார்.
தயாநிதி மாறன் வடமாநிலப் பெண்களைக் கொச்சைப்படுத்துவதாகவும், புதிய கல்விக் கொள்கை குறித்து உதயநிதி ஸ்டாலின் முரணான கருத்துகளைத் தெரிவிப்பதாகவும் தமிழிசை குற்றம் சாட்டினார். இந்தி திணிப்புக்கும் ஈழத்தமிழர் படுகொலைக்கும் காரணமான திமுகவும் காங்கிரஸும், இன்று ஓர் கூட்டணி அரசியலுக்காக ஒன்று சேர்ந்து கொண்டு பராசக்தி படம் குறித்துப் பேசுவது வேடிக்கையானது என்றும் அவர் கண்டனத்தை தெரிவித்தார்.
தமிழகம் விரைவில் பிரதமர் மோடியுடன் இணையப் போவதாகவும், பாஜகவின் செல்வாக்கு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில், பாஜகவின் தலையீடு குறித்த விமர்சனங்களுக்கு மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்தார். தமிழக அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை நம்பாமல், சிபிஐ விசாரணை கோரியதே தமிழக வெற்றிக் கழகம்தான் என்று அவர் குறிப்பிட்டார். "தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் உண்மை நிலவரம் தெரியும்" என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சட்டப்படி நடைபெறும் ஒரு விஷயத்திற்கு பாஜக எப்படி காரணமாகும் என கேள்வி எழுப்பிய தமிழிசை சௌந்தரராஜன், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ விசாரணை அறிவிக்கப்பட்டதால், எந்த சட்டமீறலும் இல்லை என்றார். இதுபோன்ற சூழலில், பாஜகவை மட்டும் குறை சொல்வது நியாயமற்றது என்றும் அவர் எதிர்க்கேள்வி எழுப்பினார். விஜய் அரசியலைச் சுற்றி நடப்பதாகவும், அதற்கு பாஜக காரணமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மதுரை உயர் நீதிமன்றத்தில் கரூர் வழக்கு நிலுவையில் இருந்தபோதிலும், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் அவரிடம் முன்வைக்கப்பட்டன. அதற்குப் பதிலளித்த தமிழிசை, "டெல்லியிலும் சிபிஐ அலுவலகம் இருப்பதால், விசாரணை அங்கு நடந்திருக்கலாம்" என்று கூறினார். இதன் மூலம், இந்த விவகாரத்தில் பாஜகவின் பங்களிப்பு பற்றிய சந்தேகங்களை அவர் மறுத்தார்.












Click it and Unblock the Notifications