"பிள்ளைகளை தேர்வு எழுத அனுப்புங்கள்" பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம்.. அன்பில் மகேஷ் வேண்டுகோள்!
பிள்ளைகளை தேர்வு எழுத பெற்றோர் அனுப்ப வேண்டும் என்று அன்பில் மகேஷ் வேண்டுகோள் வைத்துள்ளார்.
சென்னை: பிள்ளைகளை தேர்வு எழுத பெற்றோர் அனுப்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல் தேர்வு எழுதாத மாணவர்கள் பற்றி தேர்வு நாளன்றே விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது முதல் நாள் நடைபெற்ற தமிழ்த் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்ட் ஆனது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நேற்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வையும் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை.
இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி பிளஸ்-2 வகுப்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா கால கட்டத்தில் 10-ம் வகுப்பில் ஆல் பாஸ் பெற்றவர்கள். இவர்கள் நேரடியாக பிளஸ் 1 வகுப்பில் கடந்த ஆண்டு சேர்ந்து முதன் முதலாக பொதுத்தேர்வை எதிர்கொண்டவர்கள்.

அன்பில் மகேஷ் ஆலோசனை
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். இதில் துறையின் செயலாளர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி, தேர்வுத் துறை இயக்குனர் நாகராஜ முருகன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் மாணவர்கள் தேர்வு வராதது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அன்பில் மகேஷ் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், அரசுப்பள்ளி மாணவர்கள் 38,000 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 8,500 பேரும், தனியார் பள்ளி மாணவர்கள் 1,500 பேரும் முதல்நாள் தேர்வை எழுதவில்லை. தேர்வு நாளன்றே தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் தேர்வுக்கு வராததற்கு காரணம் என்ன என்பது குறித்தும் விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 11ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களின் பயம், கொரோனா பரவலின் போது 10ம் வகுப்பில் ஆல் பாஸ் செய்யப்பட்ட மாணவர்களின் பயம் உள்ளிட்டவற்றால் மாணவர்கள் தேர்வு எழுதாமல் உள்ளனர்.

அன்பில் மகேஷ் வேண்டுகோள்
அதேபோல் பெற்றோர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பிள்ளைகளை தேர்வு எழுத பெற்றோர் அனுப்ப வேண்டும். தேர்வு எழுதாத மாணவர்களின் பெற்றோரை பிற்பகலிலேயே சந்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் மாணவர்கள் தேர்வுக்கு வராததற்கான காரணம் என்பது குறித்து அறிய அறிவுறுத்தியுள்ளோம். தேர்வு எழுதாத மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தொடர்பு கொள்ளும்போது, பெற்றோரின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியம்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு
அதேபோல் தேர்வு எழுதாத மாணவர்களை மறுவாய்ப்பில் பங்கேற்க வைக்கவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். 8.50 லட்சம் மாணவர்களில், 50 ஆயிரம் மாணவர்கள் ஏன் தேர்வு எழுதவில்லை என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. இதனால் 10ம் வகுப்பில் அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், மொழிப் பாடத்தை எழுதாத மாணவர்களை, இனி வரும் தேர்வுகளை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெற்றோருக்கு கவுன்சிலிங்
யாரெல்லாம் தேர்வை எழுதவில்லையோ, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி மறு வாய்ப்பில் தேர்வு எழுத வைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் மாணவர்களின் பெற்றோருக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டியுள்ளது. மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை புறந்தள்ளிவிட்டு, பொருளாதாரத்தின் பின் பெற்றோர்கள் செல்ல வேண்டாம் என வலியுறுத்துகிறோம். கொரோனாவுக்கு பின் மாணவர்களின் மனநிலை மாறியுள்ளது. பெற்றோரின் மனநிலையும் மாறியுள்ளது. பெற்றோர் பணிக்காக புலம்பெயர்வதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு
தொடர்ந்து 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் உயர் படிப்புகளுக்கு 11ம் வகுப்பு பாடங்கள் தான் அடிப்படையாக உள்ளது. அதேபோல் தனியார் பள்ளிகளில் பாஸ் சதவிகிதத்தை காண்பிப்பதற்காக 11ம் வகுப்பு பாடத்தை சொல்லிக் கொடுக்காமல் கடக்கும் நிலையும் உருவாகியுள்ளது. அதனால் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications