நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு.. முற்றிலும் தமிழினத்தை புறந்தள்ளி வைக்கக்கூடிய சதி.. வேல்முருகன்
சென்னை: 2026ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப சீரமைக்க ஒன்றிய மோடி அரசு முடிவு செய்திருக்கிறது. மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543லிருந் 848 ஆக உயர்த்துகிறார்கள். அதன்படி தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 39லிருந்து 31 ஆக குறையும். அதேநேரம், உத்திரப்பிரதேசத்தின் 80 என்ற எண்ணிக்கை 143 ஆக உயரும். பீகாருக்கு 40லிருந்து 79 ஆக உயரும் என்றும் தமிழின ஒதுக்கலின் தீவிர சதித்திட்டம் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் மக்களவையில் 888 உறுப்பினர் இருக்கைகளும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர் இருக்கைகளும் அமையும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், 2026இல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 848 என உயர்த்த ஒன்றிய மோடி அரசு முடிவு செய்திருக்கின்றது. இந்த 848 இடங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படப் போகின்றன என்பதில் தான் தமிழின ஒதுக்கலின் தீவிர சதித்திட்டம் இருக்கிறது. இப்போதுள்ள நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கான மக்களவை உறுப்பினர்கள் 39. புதுச்சேரிக்கு 1. ஆக மொத்தம் 40. ஏற்கனவே, தமிழர்கள் நாடாளுமன்றத்தில் நிரந்தர சிறுபான்மையாக ஆக்கப்பட்டிருக்கின்றோம்.
அதனால், மக்களவையில் தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரிதான வாய்ப்புகளில் ஒரே கருத்தில் பேசும்போது கூட நாடாளுமன்றம் அதைக் காதில் கூட போட்டுக் கொள்ளாமல், தமிழின ஒதுக்கலை கடைப்பிடித்து வந்திருப்பதை கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். சான்றாக, காவிரிச் சிக்கல் குறித்த விவாதம் நடந்தபோது, தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குரலில் கண்டித்துப் பேசிய போது, மக்களவையில் ஒரு சிறு அசைவைக் கூட ஏற்படுத்த முடியவில்லை.
ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் இனக்கொலையான கொடிய செய்தியைக்கூட காதுகொடுத்துக் கேட்பதற்கு முன்வராத காலி நாற்காலிகளைக் கொண்ட அவையாகத்தான் மக்களவை இருந்தது. ஏனென்றால், மொத்தமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 543இல் தமிழ்நாட்டின் 39 என்பது மிகமிகச் சிறுபான்மை.
தமிழ் மொழி, தமிழர் தாயகம், தமிழ்நாட்டு உரிமை ஆகியவை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வருவதென்பது கனவிலும் நடக்க முடியாத செயல். காரணம் - அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை.
இருக்கிற 543 உறுப்பினர்களில் இந்தி மாநிலங்களான உத்திரப்பிரதேசம் (80), பீகார் (40), ராஜஸ்தான் (25), மத்தியப்பிரதேசம் (29), ஜார்கண்ட் (14), அரியானா (10), தில்லி (7), உத்தரகண்ட் (5), சத்தீசுகர் (11), இமாச்சலப் பிரதேசம் (4) என மொத்தம் 225 உறுப்பினர்கள் இந்தி மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
இவர்கள் எந்த சட்டத்தையும் இயற்றிக் கொள்ளக்கூடிய இயல்பான பெரும்பான்மையில் இருக்கிறார்கள். இவர்கள் முயன்றால் அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெறுவது எளிது. இவ்வாறான வாய்ப்பு எந்தக் காலத்திலும் தமிழர்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்பதும், மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பும், முற்றிலும் தமிழினத்தை புறந்தள்ளி வைக்கக்கூடிய சதித்திட்டமே ஆகும். அதாவது, தற்போது 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பல்வேறு மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளது.
இதனை 2026ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப சீரமைக்க ஒன்றிய மோடி அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் கருத்தில் கொண்டு, அதில் கூறப்படும் மக்கள் தொகை பெருக்க விகிதத்திற்கேற்ப 2026இல் மக்கள் தொகை எவ்வாறு இருக்கும் எனக் கணக்கிடுகிறார்கள். அதற்கேற்ப மக்களவை மற்றும் மாநிலங்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை முன்வைக்கப்படுகிறது.
மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543லிருந் 848 ஆக உயர்த்துகிறார்கள். அதன்படி தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 39லிருந்து 31 ஆக குறையும். அதேநேரம், உத்திரப்பிரதேசத்தின் 80 என்ற எண்ணிக்கை 143 ஆக உயரும். பீகாருக்கு 40லிருந்து 79 ஆக உயரும்.
மொத்தத்தில் 848 உறுப்பினர்களில் இந்தி மாநிலங்களுக்கு 408 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். கேரளாவுக்கு 20லிருந்து 12ம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா 42லிருந்து 34ம், கர்நாடகா 28லிருந்து 26ஆகவும் குறையும். அதாவது, தமிழ்நாடு, புதுவை மட்டுமின்றி தென் மாநிலங்கள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டுக் கூட நாடாளுமன்றத்தில் எந்தவகை சட்டத்தையும் இந்திய ஆட்சியாளர்களால் கொண்டு வர முடியும். அரசமைப்புச் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். ஏனெனில், இதே வகையான விகிதநிலை புதிதாக உருவாக்கப்படும் மாநிலங்களவையிலும் ஏற்படும்.
இன்னும் சில ஆண்டுகளில் அரசியல் ஆதிக்க மையமாக வடஇந்தியாவின் இந்தி மண்டலம் இருக்கும். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மறுசீரமைப்பு இந்த அரசியல் ஆதிக்கத்தை இன்னும் வலுப்படுத்தத் துணை செய்யும். இந்தி திணிப்பும், இந்தி ஆதிக்கமும் அதிகரிக்கும். ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ள நிலையில், மேலும், தொகுதி மறுசீரமைப்பு என்பது மூலம் தொகுதி எண்ணிக்கையை குறைப்பது பெரும் அச்சுறுத்தலுக்கான சதித்திட்டமே தவிர வேறொன்றுமில்லை.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு முடிவு செய்திருக்கும் இச்சூழலில், மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்திருப்பது வரவேற்கதக்கது.
அதே நேரத்தில், பாசிச மோடி அரசின் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு சதி திட்டத்தை தடுத்து நிறுத்த, இந்திய ஒன்றியத்தில் பரவியிருக்கும் ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்புகளையும் ஒன்று திரட்ட தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது." இவ்வாறு தி வேல்முருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications