பருத்திவீரன் டீக்கடை சீனில் நடித்த ஒத்தக்கடை ஆறுமுகத்திற்கு மாரடைப்பு! சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு
பருத்திவீரன் திரைப்படத்தில் டீக்கடைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்த ஒத்தக்கடை ஆறுமுகம் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் தவிப்பு
சென்னை: பருத்திவீரன் திரைப்படத்தில் டீக்கடைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்த ஒத்தக்கடை ஆறுமுகம் மருத்துவ செலவுக்கு வழியில்லாமல் தமிழக அரசின் உதவி நாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் சிலர்தான் வீடு, வாசல் , தோட்டம் என வசதியாக உள்ளனர். ஆனால் பலர் வறுமையில்தான் வாழ்கிறார்கள். இதற்கு எத்தனையோ பேர் உதாரணமாக சொல்லலாம்.
அந்த வகையில் பருத்திவீரன் படத்தில் டீக்கடைக்காரராக நடித்து பிரபலமானவர் நடிகர் ஒத்தக்கடை ஆறுமுகம். இவர் தாமிரபரணி, சீமராஜா, ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லை.

வறுமை
அதனால் அவரது வீட்டை வறுமை எட்டி பார்க்கிறது. அடுப்படியில் பூனை தூங்குகிறது. இவருடைய மனைவி 100 நாள் வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தில் சாப்பிட்டு வருவதாக ஆறுமுகம் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து அவர் பாலிமர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் இரு வாரங்களுக்கு முன்பு எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

இதயத்தில் ஆபரேஷன்
அங்கு எனக்கு இதயத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் என்னிடம் கையில் பணம் ஏதும் இல்லை. இதனால் வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார். இவர் நரசிங்கம் சாலையில்தான் டீக்கடை வைத்திருந்தார். ஆறுமுகம் கல்லாவில் உட்கார்ந்திருந்தார். அப்போது திடீரென இவரது டீக்கடைக்கு முன்பு நிறைய வண்டிகள் வந்தனர்.

சினிமா ஷூட்டிங்
அப்போது சினிமா சூட்டிங் என கூறியுள்ளார்கள். ஆறுமுகத்தின் டீக்கடையை சுற்றி பார்த்துவிட்டு அவரையே பருத்தி வீரன் கேரக்டருக்கு நடிக்க வைத்தார்கள். எல்லாமே அவர்களே சொல்லிக் கொடுத்து இவரை நடிக்க வைத்துள்ளார்கள், அது முதல் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் இவர் நடித்துள்ளார். பருத்திவீரன் படத்தில் நடிகர்கள் சரவணனும் கார்த்தியும் ஒரு டீக்கடையில் கஞ்சா கருப்புவிடம் செய்யும் ரகளையில் ஆறுமுகம் ஒரு சீனில் நடித்திருப்பார். மிகவும் தத்துரூபமாக மதுரை தமிழில் நடித்திருந்தார். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு தமிழக அரசு மருத்துவ உதவி செய்ய வேண்டு் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழிந்த பிளக்ஸ் பேனர் வீடு
இவரது வீடும் பிளக்ஸ் பேனர்கள் கொண்டு வேயப்பட்டதாக இருக்கிறது. இவரை போல் ஏற்கெனவே நிறைய துணை நடிகர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு உதவியை நாடியிருந்தனர். அண்மையில் காமெடியன் போண்டாமணி சிறுநீரக பிரச்சினை காரணமாக சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் சிகிச்சை வழங்கப்பட்டது.

போண்டாமணிக்கு உதவி
அவரை சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பார்த்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு திரும்பினார். அது போல் அவர் வீடு திரும்பியதும் அவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து சில உதவிகளை செய்திருந்தார். அது போல் ஒத்தக்கடை ஆறுமுகத்திற்கும் மதுரை அரசு மருத்துவமனையிலோ அல்லது சென்னையிலோ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகும். அது போல் பெரிய திரை கலைஞர்களும் இது போன்ற நலிவடைந்த நடிகர்களுக்கு உதவ வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications