தாம்பரம் ஸ்டேஷனுக்கு திடீரென வந்த நபர்கள்.. 'பொங்கல் டிக்கெட்' ரயில் பயணிகளுக்கு காத்திருந்த ஷாக்!
சென்னை: பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்த சில நிமிடங்களில் அனைத்தும் காலியாகின. இதனிடையே, தாம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய அதிகாலையில் இருந்தே காத்துக் கிடந்த பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து பார்க்கலாம்.
சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்களும் வெளியூர் மக்களும் பண்டிகை நாட்களை தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், தீபாவளி, பொங்கள் பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள்.

குடும்பத்துடன் பலர் பயணம் செய்வதால் ரயிலில் எப்படியாவது டிக்கெட் முன்பதிவு செய்து விட வேண்டும் என முடிவு செய்து டிக்கெட் முன்பதிவு செய்யும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். தற்போது ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து விடுவார்கள்.
அந்த வகையில், பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஜனவரி 10-ந்தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் வியாழக்கிழமை தொடங்கியது. தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன. அதேபோல ஜனவரி 11 ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு நடைபெற்றது.
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சரிவர கிடைப்பது இல்லை எனக்கருதி ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் எடுக்கவும் பயணிகள் பலர் திட்டமிட்டு எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு அதிகாலையிலேயே சென்று லைனில் காத்திருந்தனர். குறிப்பாக தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிகாலை 4 மணி முதல் கவுண்ட்டர்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால், முதலில் யார் வந்தார்கள்? என்ற வரிசையில் லிஸ்ட் ரெடி செய்து கவுண்ட்டர் அருகே ஒட்டி வைத்தனர்.
ஆனால், டிக்கெட் புக்கிங் தொடங்க சில மணி நிமிடமே இருந்த போது, திடீரென வந்த சிலர், நாங்கள்தான் இரவில் இருந்தே காத்து கிடக்கிறோம்... நகர்ந்து செல்லுங்கள் எனக் கூறி முதல் ஆளாக புகுந்தனர். இதைக் கேட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்வே போலீசார் அங்கு வந்து சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
அப்போது, நாங்கள்தான் முதலில் வந்ததாகவும் ஆனால், பெயர் பட்டியலை தற்போது வந்தவர்கள் கிழித்துவிட்டதாகவும் கடைசியாக வந்தவர்கள் கூறினர். ஆனால், அதிகாலையில் இருந்தே வரிசையில் காத்துக் கிடந்தவர்கள்... நாங்கள் வரும் போது பட்டியல் எதுவும் இல்லை என முறையிட்டனர். ஆனால், போலீசாரோ.. இதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. கெடுபிடியாக பேசிய நபருக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர்களுக்கு மட்டும் டிக்கெட் கிடைத்தது.
இதனால், அதிகாலையிலே வந்து காத்துக்கிடந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பண்டிகை நேரங்களில் டிக்கெட் புக்கிங்கை சில புரோக்கர்கள் ஆக்கிரமித்து விடுவதாக பயணிகள் குற்றம் சாட்டினர். பண்டிகை காலங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ரயில்வே நிர்வாகமே முறைப்படி டோக்கன் கொடுக்க வேண்டும் என்றும் அப்போதுதான் இத்தகைய குளறுபடிகளுக்கு தீர்வு காண முடியும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்.












Click it and Unblock the Notifications