சென்னை மக்களுக்கு வீட்டுமனை பட்டா.. யார் யாருக்கு வழங்கப்படும் தெரியுமா? உதயநிதி சூப்பர் தகவல்
சென்னை: ஆலந்தூர், மதுரவாயல், சோழிங்கநல்லூர், மாதவரம் உள்பட சென்னையின் புறநகர் பகுதியில் 3 லட்சத்து 20 ஆயிரம் பட்டாக்கள் வழங்க முடிவு செய்துள்ள அரசு இதுவரை 1.80 லட்சம் பேருக்கு பட்டா வழங்கி உள்ளது. இந்நிலையில் பட்டா வழங்கும் விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வீட்டுமனைகளுக்கு பட்டாக்கள் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டதில் அதிகாரிகள் முன்னிலையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிரந்தர தீர்வு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் 2 லட்சம் குடும்பங்களின் நில, வாழ்விட உரிமையை உறுதி செய்ய தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இதுபற்றி உதயநிதி மேலும் கூறுகையில், "சென்னை மாநகரம் புதிய குடியிருப்புகள் மற்றும் கட்டுமானங்கள் விரிவடைந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்ற கழக அரசு அமைந்த பிறகு, ஏற்கனவே வீடு கட்டி குடியிருக்கும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் 'இ-பட்டா'க்களை நாம் வழங்கி உள்ளோம். இவை தவிர, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளிம்பு நிலை மக்களின் குடும்பங்களுக்கு, காலி மனைப்பட்டா வழங்கி இருக்கிறது நம்முடைய திராவிட மாடல் அரசு.
மேலும், ஆலந்தூர், மதுரவாயல், சோழிங்கநல்லூர், மாதவரம் என புறநகரங்கள் சென்னையுடன் இணைக்கப்பட்ட இந்த பகுதிகளுக்கு 'டவுன் செட்டில்மென்ட்' எனப்படும் நகர நில அளவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 3 லட்சத்து 20 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரம் தான் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மீதமுள்ள பட்டாக்கள் விரைவில் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசினுடைய நோக்கம்.
இதுபோன்ற பட்டா பிரச்சினையால், சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் சுமார் 2 லட்சம் குடும்பங்கள் நிரந்தர தீர்வு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த 2 லட்சம் குடும்பங்களுக்கும் நில உரிமையும், வாழ்விட உரிமையும் உறுதி செய்யும் வகையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை தொடர்ந்து செயல்படும்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications