பட்டாவில் ஒரு அளவு, பத்திரத்தில் ஒரு அளவு.. இப்படி இருந்தால் என்ன செய்வது? எப்படி சரி செய்வது?
சென்னை: இன்றைக்கு வீட்டு மனை வாங்குவது அதிகமாக உள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் ரியல் எஸ்டேட் கொடி கட்டி பறக்கிறது. பலரும் வீடு கட்டுவதற்கு வீட்டு மனை வாங்குகிறார்கள். அங்கீகரிக்கப்படாத மனையை யாரும் இப்போது வாங்குவது இல்லை என்பதால் , அதில் சிக்கல் இருப்பது இல்லை..ஆனால் நிலத்தை வாங்கியவர்கள் பட்டா வாங்கும் போது விண்ணப்பித்தால் சில சிக்கல்கள் அவர்களுக்கு வருகிறது. சர்வேயரின் தவறு காரணமாக பட்டாவே வாங்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. அதுபற்றி பார்ப்போம்.
இன்றைக்கு பத்திரப்பதிவு செய்த உடனேயே பட்டா வாங்கிவிட முடிகிறது. தானியாங்கி முறையில் பட்டா வழங்கப்படுவதால் எளிதாக பட்டாவிற்கு விண்ணப்பித்து பட்டா வாங்கிவிடலாம். ஆனால் முன்பு இடம் வாங்கியவர்கள், அந்த காலத்தில் இடம் வாங்கியவர்களில் பலர் பட்டாவிற்கு கூட விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள். இதனால் பல வருடம் கழித்து பட்டா வாங்க போனால் பல்வேறு சிக்கல்கள் வருகின்றன.

முதல் சிக்கல் என்னவென்றால், பட்டா வாங்க போகும், அந்த இடத்தில் பத்திரத்தில் உள்ள அளவுப்படி பட்டா வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஏன் இப்படி ஏற்படுகிறது என்றால், பக்கத்து இடத்தில் உள்ளவர்களுக்கு அதிக இடம் வழங்கப்பட்டிருக்கும். அதாவது பட்டாவிற்காக சர்வேயர் அளக்கும் போது, உங்கள் கல்லை கணக்காக வைத்து தவறுதலாக அளவீடு செய்துவிடுவார்கள்.. அப்படி செய்தால் உங்கள் இடத்திற்கு கணிசமான இடம் அவருக்கு பட்டா தந்துவிடுவார்கள்.. அதன்பிறகு நீங்கள் பட்டா வாங்க போனால், பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை தருவீர்கள்.
அப்போது தான் அந்த தவறு தெரியவரும். இந்த தவறை சர்வேயர் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டு, பழைய பட்டாவை ரத்து செய்து புதிய பட்டா தரலாம். ஆனால் அப்படி செய்வது இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பட்டா வாங்கியஅண்டை வீட்டுக்காரர், தனக்கு பட்டாவில் கூடுதல் இடம் இருக்கிறது என்று கடிதம் தர வேண்டும். மேலும் தவறை சரி செய்து, பத்திரத்தில் உள்ள அளவுப்படி பட்டா தருமாறு அவர் கடிதம் தர வேண்டும். நேரில் வந்து தாலுகா அலுவலகத்தில் இதனை செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே உங்களுக்கு பட்டா கிடைக்கும். அதுவரையில் தவறான அளவில் உங்களுக்கு பட்டாவே வழங்க முடியாது. அப்படியே வழங்கினாலும். மீதமுள்ள இடத்திற்கு தான் பட்டா தருவார்கள். அதை உங்களால் ஏற்கவே முடியாத நிலை ஏற்படும். எனவே பட்டாவிற்கு விண்ணப்பிக்கும் போதும், நிலத்தை அளவுக்கும் போது எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். அப்படி செய்தால் தான் எளிதாக இருக்கும்.இல்லாவிட்டால் அண்டை வீட்டாருடன் கடைசி வரை சிக்கல் தீராது. இறுதியில் நீதிமன்றம் சென்று முறையிட்டு தீர்வுக்காக அலைய வேண்டியதிருக்கும்.












Click it and Unblock the Notifications